×

பட்டா தந்து 25 ஆண்டை கடந்தும் இதுவரை நிலத்தை அளந்து தரலை...குறைதீர் கூட்டத்தில் ஆதிதிராவிட மக்கள் குமுறல்

திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். துறையூர் கோவிந்தாபுரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் மனு அளித்துவிட்டு கூறியதாவது: கடந்த 1995ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 202 பேருக்கு 2 சென்ட் இடம் வழங்க உத்தரவிட்டார். அதன்படி ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கோவிந்தாபுரத்தில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால், 25 ஆண்டுகளாகியும் இதுவரை அந்த இடத்தை அதிகாரிகள் அளந்து நிலத்தை பிரித்து தரவில்லை. மேலும், உள்ளூர் பகுதி மக்கள் அல்லாத வெளியூரை சேர்ந்த சிலருக்கும் அங்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பலர் அரசு ஊழியர்களாக உள்ளனர். உள்ளூர் மக்களுக்கு மட்டுமே பட்டா வழங்கி, நிலத்தை பிரித்துத்தரவேண்டும்’ என்றனர்.

நீர்நிலைகளில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கணும்..

திருச்சி நல அமைப்புகள் மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் சார்பில் ராமகிருஷ்ணன் அளித்த மனுவில், ‘கொரானா வைரஸ் தொற்று நோய் தாக்கம் பற்றி பல்வேறு தடுப்பு முறைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. நோய் தடுப்பு முறைகளை வெற்று கோஷம் போடாமல், தொற்று நோய் தடுப்பு மருத்துவ முறைகளை உருப்படியாக உண்மையாக மேற்கொள்ள வேண்டும். திருச்சி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவமனையில் முன் பகுதியில் துவங்க வேண்டும். பொது இடங்கள், சாலையோரங்கள், நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டுவதை தடுத்து தண்டிக்க வேண்டும். சாலையோர உணவகங்களில் உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
முசிறி திருத்தலையூரைச் சேர்ந்தவர் விவசாயி மருதை (70). இவர் ஆலமரம் அருகே பள்ளர் தெருவில் வசிப்பதாகவும், தெருவில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக அளந்த அதிகாரிகள் இவரது வீட்டின் முன் பகுதியை மட்டும் இடித்துவிட்டு, மற்ற ஆக்கிரமிப்புகளை அற்றவில்லை எனவும் புகார் அளித்தார்.

வாய்க்காலை சீரமைக்கணும்...

அந்தநல்லூர் ஒன்றியம் மல்லியம்பத்து ராமநாதநல்லூர் கிராமம் ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் ராமலிங்கம் அளித்த மனுவில், ‘அங்கன்வாடி மற்றும் துவக்கப்பள்ளி அருகே தெருவின் நடுவே கழிவுநீர் வாய்க்கால் ஓடுகிறது. வாய்க்கால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று நோய் பரவும் சூழல் உள்ளது. எனவே வாய்க்காலை சீரமைக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

பழுதான மின்கம்பங்களை அகற்றணும்...

குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் சுந்தர் என்பவர் அளித்த மனுவில், ‘திருச்சி சத்திரம் பஸ் நிலையம் தற்போது நவீன அடுக்குமாடி பஸ் நிலையமாக மாற்றி கட்டப்பட்டு வருகிறது. இதனால் இங்கிருந்து இயக்கப்படும் பஸ்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளது. குளித்தலை, கரூர் மார்க்கம் செல்லும் கோவை, திருப்பூர், ஈரோடு, தாராபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் தாஜ் மண்டபம் அருகே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதனால் மக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே, லலிதா ஜூவல்லரி அருகே பஸ்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முசிறி-குளித்தலையை இணைக்கும் தந்தை பெரியார் காவிரி பாலத்தில் முசிறி பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதியில் பழுதான மின்கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

பார்வையற்றவர்களுக்கு இலவச வீடுகள் ஒதுக்கணும்..

பார்வையற்றோர் தேசிய கூட்டமைப்பின் தமிழக திருச்சி மத்திய கிளை தலைவர் கலியமூர்த்தி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், ‘பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,000லிருந்து ரூ.3,000மாக உயர்த்தித்தர தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். சுய வேலைவாய்ப்பு துவங்க ஏதுவாக மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சியில் உள்ள கடைகளை குறைந்தபட்சம் 2 சதவீதம் ஒதுக்கீடு செய்து மானியத்துடன் கூடிய வட்டியில்லா கடன் வழங்கி உதவ வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் அனைத்து பார்வையற்றவர்களுக்கும் இலவச வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இலவச வீடுகள் ஒதுக்கித்தரவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.

இயந்திர ஒலியால் இதய நோயாளிகள் அவதி...

திருவெறும்பூர், வடக்கு காட்டூர், பாரதிதாசன் நகர், 10வது தெருவைச் சேர்ந்த அன்பழகன் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் இயங்கி வரும் தனியார் இன்டஸ்டிரியால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அளவுக்கதிகமான சத்தத்துடன் இயந்திரங்கள் இயக்குவதால் முதியவர், கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் கடும் அவதியடைகின்றனர். வாரத்தின் 7 நாளும் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை பவர் கிரைண்டிங், பவர் வெல்டிங் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. அபாயகரமான சத்தத்தாலும், வெல்டிங் புகையாலும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. தவிர கனரக வாகனங்கள் மூலம் அவர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த கனரக வாகனங்களால் தெரு சாலை நாசமாவதோடு, பலரது வீட்டு வாசல்களும் உடைகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்க் அணிந்து மஜக மனு

கொரானா நோய் பரவுவதை தடுக்க பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதுபோல, டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என முகத்தில் மாஸ்க் அணிந்தபடி மனிதநேய ஜனநாயக கட்சியினர் மனு அளித்தனர். கொரானா நோய் தொற்று காரணமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மக்களின் கூட்டம் நேற்று சற்று குறைவாகவே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : stroke ,land ,fire , The strap, the inferior crowd, the downtrodden people
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!