இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை தவிர அனைத்து நிறுவனங்களுக்கும் 3 நாட்கள் பொதுவிடுமுறை: அதிபர் ராஜபக்சே அறிவிப்பு

கொழும்பு: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் இருந்துதான் பரவத் தொடங்கியது. 15 நாட்களுக்கு முன்பு வரை, கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது, சீனா. ஆனால், கொரோனா வைரஸ் பரவுவது உச்சத்தை தொட்டு, நோய்த் தொற்றுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிட்டதாக கடந்த வாரத்திலேயே சீனா அறிவித்து விட்டது. ஆனால், சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வரைஸ் தடுப்பு நடவடிக்கையாக இலங்கையில் 3 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர அனைத்து நிறுவனங்களுக்கு வரும் 19ம் தேதி வரை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை அடிப்படையாகக்கொண்டு இந்த விடுமுறை நீடிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இலங்கையில் தற்போது வரை 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>