×

வங்க தேச முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் 100-வது பிறந்தநாள் விழா: காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர்மோடி

புதுடெல்லி: வங்கதேசத்தினரால் `வங்கபந்து’ என்றழைக்கப்படும், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவை வெகு விமரிசையாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு செய்தது. கடந்த 1971ல் வங்கதேசம் உருவானபோது அதன் முதல்  அதிபராக பொறுப்பேற்று கொண்ட முஜிபுர், பின்னர் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். இங்கிலாந்துக்கான வங்கதேச தூதர் சயிதா முனா தஸ்னீம் கூறுகையில், இம்மாதம் 17ம் தேதி வங்கதேசத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட  உள்ளது. அதே தேதியில் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த நாளும் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினரில் இந்திய பிரதமர் மோடியும் ஒருவராவார். வங்கதேச விடுதலையில் இந்தியா முக்கிய பங்காற்றி  உள்ளது. முஜிபுர் ரஹ்மான் அதிபராக இருந்த போது, அப்போதைய இந்திய பிரதமர் இந்திராவுடன் இணைந்து, ஆக்கப்பூர்வநடவடிக்கைகள் எடுத்தனர்’’ என்றார்.

இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பரில் வங்கதேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மேமன் மற்றும் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் ஆகியோர் இந்தியாவுக்கான பயணங்களை  ரத்து செய்தனர். இந்த பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா தெரிவித்தாலும், இரு நாடுகளுக்கிடையே உறவுகள் பாதித்து இருந்தன. தொடர்ந்து, கொரோனா பாதிப்பால் வங்கதேசத்தில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அந்நாடு அறிவித்தது. கொடிய வைரஸ் பரவாமல் இருக்க, அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இருப்பினும், நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி வரும் 17ம் தேதி வங்கதேச தலைநகர் தாகா செல்வதற்கான பயண  திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால், வங்கதேசத்திலும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, பிரதமர் மோடியின் அந்நாட்டு பயணத் திட்டம் ரத்து செய்தார். இந்நிலையில், வங்கதேச நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100  வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்க உள்ளார். மேலும், பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரஹ்மான்:

மார்ச் 17, 1920 - வங்கதேசத்தின் முதல் அதிபர் ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த தினம் இன்று. கிழக்கு வங்கப் பகுதியின் (பின்னர் கிழக்கு பாகிஸ்தான்) டோங்கிபுரா கிராமத்தில் (1920) பிறந்தவர். வறுமை, வேலையின்மை, மோசமான  வாழ்க்கைத்தரம் இவற்றுக்கு சோஷலிஸம் தீர்வு தரும் என்று நம்பினார். தான் ஒரு வங்காளி என்பதை பெருமையாகக் கருதியவர். பாகிஸ்தானில் உருது மட்டுமே தேசிய மொழி என்று 1949-ல் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கிழக்கு வங்கத்தில் நடந்த போராட்டங்களுக்கு தலைமை யேற்றார். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டும் 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மக்கள் ஆதரவு பெருகியதால் விடுதலை செய்யப்பட்டார்.

1970-ல் நடந்த பொதுத் தேர்தல்களில் ஷேய்க் முஜிபிர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றது. ஆனால் இவர் பிரதமராவதை ராணுவமும், மேற்கு பாகிஸ்தானின் தலைவர்களும் விரும்பவில்லை. பாக். அதிபர் யாஹியா கான்  ராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்து, அவாமி லீக்கை தடை செய்தார். புரட்சி வெடித்தது. ஏராளமானோர் கொல்லப் பட்டனர். முக்தி பாஹினி படை உருவானது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் முக்தி பாஹினி படையினர் பாகிஸ்தானுடன்  போரிட்டு வென்றனர். 1971-ல் வங்க தேசம் உருவானது. புதிய தேசத்தின் முதல் அதிபராகப் பொறுப்பேற்றார். பின்னர், பிரதமராகவும் இருந்தார்.
 

Tags : Birthday Party ,Sheikh Mujibur Rahman ,Bangladesh ,President , Sheikh Mujibur Rahman's 100th Birthday Party: First President of Bangladesh
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...