×

துபாய், சவூதியில் இருந்து சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா அறிகுறி? விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என மருத்துவர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். சவூதியில் இருந்து சென்னை திரும்பியவரும் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வைரஸ் பீதி தற்போது தமிழகத்தையும் அச்சுறுத்த தொடங்கி உள்ளது. துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த 286 பயணிகளை விமான நிலைய சிறப்பு மருத்துவ குழுவினர் கொரோனா வைரஸ் சோதனை நடத்தினர்.   அதில் 5 பெண்கள் உள்பட 20 பேருக்கு கடுமையான காய்ச்சல், சளி, சுவாசிப்பதில் சிரமம் இருந்ததை கண்டுபிடித்தனர்.  இதையடுத்து அவர்கள் 20 பேரையும் வெளியில் அனுப்பாமல் சென்னை விமான நிலையத்தில் உள்ள சிறப்பு தனி அறையில் வைத்து உயர்மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சுமார் 4 மணி நேரம் பரிசோதித்தனர்.

அப்போது அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. மேலும் இவர்கள் 20 பேரில், 9 பேர் தமிழகத்தையும், 3 பேர் ஆந்திர மாநிலத்தையும்,   2 பேர் புதுச்சேரி, மற்றவர்கள் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் 30 முதல் 40 வயது வரை உள்ளவர்கள்.   மேலும் டென்மார்க், ஸ்வீடன், பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பல்வேறு தனியார்  நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். தற்போது கொரோனா வைரஸ் பீதி காரணமாக தங்களுடைய நிறுவனங்களில் நீண்ட கால விடுப்பு எடுத்து விட்டு சொந்த ஊர் திரும்பி இருந்தனர் என தெரியவந்துள்ளது. ஆனாலும் மருத்துவ குழுவினர் இவர்களை உடனடியாக வீடுகளுக்கு அனுப்ப முடியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்து நேற்று பகல் 1 மணிக்கு 20 பேரையும் 2 ஆம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றி பூந்தமல்லியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

நாளை (இன்று) மாலை  20  பேருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அதன்புன்புதான் அவர்களை வீடுகளுக்கு அனுப்புவதா அல்லது சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு  வார்டுகளுக்கு மாற்றுவதா என முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். n திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அருண் (29). கடந்த 3 நாட்களுக்கு முன் சவூதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் காய்ச்சல் எதுவும் இல்லை என சொந்த ஊரான திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கடந்த இரு நாட்களாக லேசான தொடர் இருமல் இருந்ததால், நேற்று முன்தினம் அவர், திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கொரோனாஅறிகுறி உள்ளதால், உடனடியாக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர்.

ஒருமணி நேர முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, அருணை அவசர ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பினர். இதனால் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. யாரையும் மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் மிகுந்த பாதுகாப்போடு அந்த வாலிபரை சென்னைக்கு அனுப்பினர். சவூதி அரேபியாவில் இருந்து வந்ததால் கொரோனா வைரஸ் தாக்கியிருக்குமோ என்ற அச்சத்தில் வாலிபர் சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் முழு பரிசோதனைக்கு பிறகு இதுகுறித்த விவரம் தெரியவரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags : Dubai ,Saudi Arabia ,airport , Dubai, Saudi, Chennai, Corona sign, airport,
× RELATED வெள்ளத்தில் மூழ்கிய துபாய்…75...