×

‘கொரோனா’ முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஐடி நிறுவனங்கள் முதல் தியேட்டர்கள் வரை வெறிச்சோடியது

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க  அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னை முழுவதும் திரையரங்குகள் முதல் வணிக வளாகங்கள் வரை மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசலும் மாநகரம் முழுவதும் குறைந்தே காணப்பட்டது. கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் உயிர்கொல்லி வைரசாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது.  சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்றும் அதற்கு பதில் வீட்டில் இருந்தபடியே பணி செய்யலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் ஐடி நிறுவனங்களை சார்ந்து உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெறிச்சோடிய மால்கள், திரையரங்குகள்: கொரோனா தடுப்பு நடவடிக்கையால் சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகளில் மக்கள் கூட்டமின்றி காணப்படுகிறது. அதேபோல், வேளச்சேரி, மயிலாப்பூர், வடபழனி, அண்ணாசாலை, புரசைவாக்கம் என சென்னை முழுவதும் உள்ள பிரபல வணிக வளாகங்கள் அனைத்து மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஆட்டோ டிரைவர்கள் தவிப்பு: வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கால் டாக்சி டிரைவர்கள் சவாரி கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மெட்ரோ ரயிலை தவிர்க்கும் மக்கள்: குளிர்பதன வசதியுடன் இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் கொரோனா தொற்று எளிதாக பரவும் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதை தவிர்த்து வருவதாக மெட்ரோ ரயில் சேவையை தினமும் பயன்படுத்தும் பயணிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடும் இழப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் சந்தித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட விடுப்பில் செல்லும் அரசு ஊழியர்கள்:சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள ஊழியர்கள் பலர் கொரோனா அச்சத்தால் பணிக்கு வராமல் நீண்ட விடுப்பு எடுத்து பலர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பணிகள் பல பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுகாதாரத்துறையில் தான் அதிகளவில் விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அரசு சுகாதாரத்துறையில் யாரும் விடுப்பு எடுக்க கூடாது என்று வாய் மொழியாக உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனாலும் ஊழியர்கள் உயிர் அச்சத்தில் விடுப்பில் சென்றுள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது: அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், மார்க்கெட் என பல இடங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் சென்னை முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலின்றி காணப்பட்டது. மாநகர பேருந்துகளிலும் பயணிகள் கூட்டமும் குறைந்து இருந்தது. குறிப்பாக மெரினா காமராஜர் சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலைகளில் வாகன நெரிசலின்றி காணப்பட்டது.



Tags : IT corporations ,theaters ,Corona , Corona, IT Companies, Theaters
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...