×

வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி? மு.க.ஸ்டாலின் - முதல்வர் இடையே காரசார வாக்குவாதம்: திமுக உறுப்பினர் ஆஸ்டினை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

* துரைமுருகன் கோரிக்கை ஏற்று  தண்டனை நிறுத்திவைப்பு

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்- முதல்வர் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது திமுக உறுப்பினர் ஆஸ்டினை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். பின்னர் துரைமுருகன் கோரிக்கையை ஏற்று அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று உள்ளாட்சி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஒட்டன்சத்திரம் சக்கரபாணி(திமுக கொறடா) கலந்து கொண்டு பேசியதாவது: மாவட்ட கவுன்சிலர்களில் 243 இடங்களிலும், ஒன்றிய கவுன்சிலர்களில் 2,100 இடங்களிலும் வெற்றி பெற்றோம்.  ஒட்டு மொத்தமாக தேர்தல் நடத்தியிருக்கலாம்.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நீங்களே வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதாக சொல்கிறீர்கள். இந்த ஆட்சி மீது மக்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது நாடாளுமன்ற தேர்தல் முடிவை வைத்து தெரியும்.

முதல்வர் பழனிசாமி: மக்களிடத்தில் எங்களுடைய செல்வாக்கு எப்பொழுதும் சரியவில்லை. நீங்கள் நாடாளுமன்ற தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்த காரணத்தினால் தான் அந்த வாக்குகளை பெற்றீர்கள்.உண்மை தெரிந்த காரணத்தினால் இடைத்தேர்தலில் இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம்.  எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்: மிக விரைவில் 2021ம் ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, நாடாளுமன்றத் தேர்தலின்போது அறிவித்த திட்டங்களை எல்லாம், ஆட்சியின் மூலமாகவும் மத்திய ஆட்சியின் மூலமாகவும் நிச்சயமாக நிறைவேற்றுவோம். .முதல்வர் பழனிசாமி: 2021ல் தெரிவிக்க வேண்டியதை இப்பொழுது எதற்கு தெரிவித்தீர்கள். அதுவும்  நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எதற்கு தெரிவித்தீர்கள்.   (இந்த நேரத்தில் திமுக உறுப்பினர் ஆஸ்டின் கருத்து ஒன்றை தெரிவித்தார்.

இதைப்பார்த்து பேசிக் கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கோபமடைந்தார். அவருடன் நேரடி மோதலில் ஈடுபட்டார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிமுக- திமுக உறுப்பினர்களிடையே அமளி ஏற்பட்டது)
சபாநாயகர் தனபால்: ஆஸ்டின், பலமுறை நீங்கள் உட்கார்ந்து கொண்டு பேசுவது முறையல்ல. முதல்வர் பேசும்போது அனைவரும் அமைதி காப்பது மரபு. ஆஸ்டினுக்கு எனது இறுதி எச்சரிக்கை இது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் இதேபோல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.   துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம்: ஏற்கனவே, 2, 3 முறை அவருக்கு இறுதி எச்சரிக்கை  வழங்கியிருக்கிறீர்கள். சபாநாயகர் தனபால்: உறுப்பினர் ஆஸ்டினை இன்று ஒரு நாள் அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடுகிறேன். முதல்வர் பழனிசாமி: எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார்கள். 2021-ல் சொல்ல வேண்டியதை முன்பே சொன்னோம் என்று. அதைத்தான் நான் தெளிவுப்படுத்தினேன்.

நாடாளுமன்றத்திலே மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று மாநில அரசிற்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்று சொன்னால் அதில் தவறில்லை. ஆனால் மாநில அரசிற்குட்பட்ட கூட்டுறவு சங்கங்களிலே பெறப்பட்ட விவசாயிகளின் கடன்களை எப்படி தள்ளுபடி செய்வீர்கள். அதை எல்லாம் நம்பி மக்கள் வாக்களித்தார்கள். பின்னர், உண்மையை புரிந்துகொண்டு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றியை தந்தார்கள். எனவே, 2021ம் ஆண்டு யாரை ஆட்சிக்கு கொண்டு வருவது என்று மக்கள் முடிவு செய்வார்கள்.  (இந்த நேரத்தில் உறுப்பினர் ஆஸ்டினை வெளியேற்ற அவைக்காவலர்கள் உள்ளே வந்தனர். அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேசினார்)
 எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: முதல்வர் பேசும் போது, அவையில் அமர்ந்து கொண்டு பேசுவதை அனுமதிக்க முடியாத ஒன்று தான். 2, 3 முறை எச்சரிக்கை செய்துள்ளீர்கள்.

எனவே, உறுப்பினர் ஆஸ்டின் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இனி அதுபோல் நடக்காது என்று எதிர்க்கட்சி தலைவரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும் உத்தரவாதம் தந்தால் தண்டனையை நிறுத்தி வையுங்கள். சபாநாயகர் தனபால்: உத்தரவாதம் தரப்பட்டதால் ஆஸ்டின் மீதான தண்டனையை நிறுத்தி வைக்கிறேன். இனி அவையை நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.


Tags : elections ,Arbitrator ,MK Stalin ,Speaker orders removal ,DMK ,dispatcher ,Austin Who ,Austin ,CM , Assembly election, MK Stalin, CM, DMK member, Speaker
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...