×

உள்ளாட்சி பணிகளே நடக்கல திமுக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக உள்ளாட்சிப் பணிகள் நடக்கவில்லை என்று திமுக எம்எல்ஏ கார்த்திக் சட்டப் பேரவையில் நேற்று தெரிவித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நேற்று நடந்தது. அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது: சிங்காநல்லூர் கார்த்திக் (திமுக): பீளமேடு பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பாலம் கட்டும் பணி இன்னும் முழுமை அடையவில்லை. அதேபோல கோவையில் பல்வேறு இடங்களில் ரயில்வே மேம்பாலப் பணிகள் முழுமைபெறவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி: பீளமேடு பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதுதொடர்பாக நடக்கும் வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு பணிகள் தொடங்கும்.

அமைச்சர் வேலுமணி: கோவையில் நிறைய மேம்பாலங்களுக்கான பணிகள் நடக்கிறது. கார்த்திக்: கடந்த 9ம் ஆண்டுகளாக பணிகள் நடக்கவில்லை என்றுதான் கேட்டேன். முதலில் திட்டப் பணிகளுக்கான அரசாணை போட்டுவிட்டு பிறகு பணிகள் தொடங்கிய பிறகுதான் நிலம் கையகப்படுத்துவார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற பணிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் பணிகள் நிற்கிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன்: நிலத்தை எடுத்துவிட்டுத்தான் பணியை தொடங்க முடியும் என்று முதல்வர் கூறுகிறாரா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நிலப் பிரச்னை இருந்தால் திட்டத்தை செயல்படுத்த முடியாது. கார்த்திக்: கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படவில்லை. அதனால் உள்ளாட்சிகளில் தற்ேபாது என்ன பணி நடக்கிறது என்றே யாருக்கும் தெரியவில்லை. பல துறை வல்லுனர்கள், கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து பேசி, அவர்களின் ஆலோசனையை பெற்று பணிகளை நடத்தினால் நன்றாக இருக்கும். மேலும், மத்திய, மாநில நிதியுடன் செயல்படுத்தப்படும் பணிகள் சிறப்பாக நடக்கவில்லை.

அமைச்சர் வேலுமணி: உள்ளாட்சிகளில் இதுபோல உள்ள பிரச்னைகளை ஆய்வு செய்வதற்காக அரசு தரப்பில் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.  கார்த்திக்: சொத்து வரி உயர்வை தற்காலிகமாக சில இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இது தேர்தலை முன்னிட்டு செய்துள்ளதாக தெரிகிறது. அமைச்சர் வேலுமணி: சொத்து வரி உயர்வு தொடர்பாக பொதுமக்கள் வைத்த கோரிக்கை ஏற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்யவும், பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. கருத்து கேட்ட பிறகு முடிவு செய்வோம். கார்த்திக்: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கான தேர்தல் 3 முறை அறிவிக்கப்பட்டும் தேர்தல் நடக்கவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் கேட்டால், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுகிறார். மாவட்ட ஆட்சியரே அப்படி கூறுகிறார் என்றால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையா? அமைச்சர் வேலுமணி: வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறது. தண்டராம்பட்டு என்பது ஒரு ஒன்றியம். அந்த அளவில் அங்கு பிரச்னை இருக்கலாம்.

Tags : government ,MLA , Local Works, DMK MLA
× RELATED அப்துல்வஹாப் எம்எல்ஏ உடன் பிரசாரம்...