×

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை கண்காணிக்க பூந்தமல்லியில் கோரன்டைன் வார்டு அமைக்கப்பட்டுள்ளது

சென்னை: துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்த 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, பூந்தமல்லியில் அமைக்கப்பட்ட கோரன்டைன் வார்டில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளில் 20 பேர் பூந்தமல்லி அரசு பொது சுகாதார நிறுவனத்தில் கொரோனா அறிகுறி உள்ளதா அறிய தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் 30 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள். இதில் 6 பேர் பெண்கள். இவர்கள் டென்மார்க், சுவீடன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பணி மற்றும் சுற்றுலா சென்றவர்கள்.  தற்போது கொரோனா பீதி காரணமாக சொந்த நாட்டிற்கு துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்தனர்.

இவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிவதற்காக பூந்தமல்லியில் உள்ள அரசு பொது சுகாதார நிறுவனத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று முன்தினம் ஒருவரும், நேற்று காலை 14 பேரும், மாலை 5 பேரும் இங்கு பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனித்தனி அறைகளில் போதிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அங்கிருந்த மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:  இங்கு பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் 14 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். இவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் பல்வேறு ஆரம்ப கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளனர். இவர்களுக்கு தற்போது கொரோனா அறிகுறி எதுவும் இல்லை.

இருப்பினும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் என்ற வகையில் அனைவரும் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  6 மணி நேரத்திற்கு ஒரு முறை இவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.  24 மணி நேரமும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் யாரும் சந்திக்க அனுமதியில்லை. 14 நாட்கள் தொடர் கண்காணிப்பிற்கு பிறகே அரசின் அனுமதி பெற்று அவர்களை அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். இதற்கிடையே இங்கு அனுமதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அவர்களது உறவினர்கள் சிலர் வந்தனர். ஆனால் அவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்துள்ளனர். நுழைவு வாயிலிலேயே உள்ளே செல்லும் அனைவரின் கைகளிலும் மருந்து மற்றும் சோப்பு கரைசல் தெளிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர். அதன் பிறகு வெளியே செல்லும் போதும் இதே போல கரைசல் தெளிக்கப்பட்டு அனுப்புகின்றனர்.  



Tags : Corontaine Ward ,Poonthamalli , Coronavirus, Fungus, Corentine Ward
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்