×

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: 5000 கோடி வர்த்தகம் முடங்கியது: தொழிற்சாலை, தியேட்டர், சுற்றுலா தலங்கள் மூடல்

சென்னை: கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் தமிழகத்தில் தியேட்டர், சுற்றுலா தலங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் 5000 கோடி வர்த்தகம் முடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பலர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.எனவே கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வரும் 31 ம் தேதி வரை விடுமுறை விட்டும் முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். மத்திய அரசு சில வெளிநாட்டு பயணிகள் வருகையை தடை செய்துள்ளது.

எனினும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.கேரளாவிலிருந்து தமிழகத்தில் கோழிகள் கொண்டு வரப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கறிகோழி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களும் மூடப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்று கிழமை மக்கள் அதிகம் கூடுவர். ஆனால் மக்கள் வருகை இல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.தமிழகத்தில் அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மக்கள் வருகை இல்லாததால் வெறிச்சோடின. பொது இடங்களில் குறிப்பாக, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வருகை புரியும் மக்கள் பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் அனைத்து தொழிற்சாலைகளும், பின்னலாடை நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் முடங்கின. கரூரில் 300 கோடி வர்த்தகம் தேக்கம் அடைந்துள்ளது. கோவை, திருப்பூரில் இருந்து சீனாவுக்கு தினமும் 120 கோடி மதிப்பிலான தென்னை நார் ஏற்றுமதி செய்யப்படும். அமெரிக்கா, கடனா ஆகிய நாடுகளுக்கும் பல நூறு கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தன. கடந்த 20 நாட்களாக இந்த ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஆர்டர்களுக்கு மட்டுமே பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை. குறிப்பாக அமெரிக்கா, சீனாவில் இருந்து ஒரு ஆர்டர் கூட இதுவரை கிடைக்கவில்லை. தமிழகத்தில் ஓட்டல் தொழில்களும் முடங்கி விட்டன. தினமும் பல நூறு கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன இயக்கங்களும் நிறுத்தப்பட்டுள்ளதால், பெட்ரோல் நிலையங்களிலும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், கோவையில் இருந்து ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தினமும் 100 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதுவும் நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுற்றுலாத்தலங்கள், தியேட்டர் மூடப்பட்டதாலும், தொழில் நிறுவனங்களில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் 5000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதால் வேலையிழப்பு, தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு பொருளாதாரத்தை பாதாளத்திற்கு தள்ளி உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரசால் வர்த்தகம் முழுமையாக முடங்கி விட்டன. 


Tags : factory ,Corona ,tourist spots ,theater , Corona virus, trade freeze, factory, theater, tourist spots
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...