×

கும்பகோணத்தில் பயங்கர சம்பவம் தொழிலதிபரை கொன்று நகைகள் கொள்ளை: காயத்துடன் கெஞ்சியதால் மனைவியை விட்டுச் சென்ற 5 பேர் கும்பலுக்கு வலை

கும்பகோணம்: தொழிலதிபரை கழுத்தை அறுத்து கொன்று நகைகளை 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது. முன்னதாக அவர் காயத்துடன் கெஞ்சியதால் மனைவியை விட்டுச்சென்றது. கும்பகோணத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (65). தொழிலதிபரான இவருக்கு அப்பகுதியில் ஏராளமான எண்ணெய் கடைகள் உள்ளது. இவரது மனைவி விஜயா. இவர்களது மகள் சரண்யா. மருமகன் கோவிந்தராஜ். கூட்டு குடும்பமாக உள்ளனர். கடந்த 14ம் தேதி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு கணவருடன் சரண்யா சென்று விட்டார்.

நேற்றுமுன்தினம் இரவு 2 பேர் வந்து வீட்டு கதவை தட்டினர். விஜயா கதவை திறந்த போது அவர்கள் தாம்பூல தட்டுடன் நின்றனர். ஐயாவுக்கு பத்திரிகை வைக்க வேண்டுமென கூறியதால் உள்ளே அனுமதித்துள்ளர். அப்போது ராமநாதன் மனைவியிடம் குடிக்க தண்ணீர் எடுத்து வருமாறு கூறினார். அவர் தண்ணீர் எடுக்க சென்றபோது மேலும் 3 பேர் வந்தனர். டிவி பார்த்து கொண்டிருந்த ராமநாதன், அவர்களை யாரென்று விசாரித்து கொண்டிருந்த போது திடீரென டிவி சத்தத்தை கூட்டிவைத்து அவரை சரமாரியாக தாக்கினர். அங்கு வந்த விஜயா கூச்சலிடவே அவரையும் தாக்க முயன்றனர். காயத்துடன் இருந்த ராமநாதன், மனைவியை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். இதனால் அவரை ஒரு அறைக்குள் தள்ளி அடைத்து விட்டனர்.

பின்னர் ராமநாதனை பயங்கரமாக தாக்கி கழுத்தை அறுத்து விட்டு பீரோவில் இருந்த 60 பவுன் நகைகளை எடுத்தனர். ராமநாதன் துடிதுடித்து இறந்ததும் அவர் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு கும்பல் தப்பியது. அறைக்குள் இருந்து விஜயா அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டனர். தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் விஜயா கூறும்போது வீட்டிற்கு வந்த 5 பேரில் ஒருவன் கடந்த 4 நாட்களுக்கு முன்பே வந்து ஐயாவை நேரில் பார்த்து பத்திரிகை வைக்க வந்ததாக கூறினான். அவர் கடையில் இருப்பதாக சொன்னதால் திரும்பி சென்றான். மீண்டும் அதே நபர் வந்ததால் வீட்டுக்குள் விட்டேன். நகைகளை எடுத்த பின்னர் எனது கணவரை பார்த்த அந்த கும்பல், இவனை விடக்கூடாது, இவனுக்கு மட்டும் தான் எல்லா விஷயமும் தெரியும் என கூறியபடியே கணவரை கொன்று விட்டனர் என்றார்.

ராமநாதன் வீட்டுக்கு முதலில் வந்த 2 பேர், அவருக்கு தெரிந்தவர்களாகவே இருக்க வேண்டும். அதனால் தான் வரவேற்று ஹாலில் அமர வைத்துள்ளார். அனைவரும் 20 முதல் 25 வயதுடையவர்கள். பீரோவில் 100 பவுன் நகைகள், பணக்கட்டுகள் இருந்தும் 60 பவுன் மட்டுமே எடுத்து சென்றுள்ளனர். பண கட்டுகளை எடுக்காமல் அறையில் சிதற விட்டு சென்றுள்ளனர். வேறு பிரச்னைக்காக கொலை செய்து விட்டு கொள்ளையடித்தது போல் கும்பல் நாடகமாடியதா, அவர்கள் முன்னாள் ஊழியர்களா என போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

* கடையடைப்பு போராட்டம்
ராமநாதன் கொலை சம்பவத்தை கண்டித்து கும்பகோணத்தில் வணிகர்கள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். பெரியக்கடை தெரு, சக்கரபாணி தெற்கு வீதி,மேலவீதி, கீழவீதி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 500 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Tags : businessman ,Kumbakonam , Terrible incident, jewelry robbery, wife, 5 people gang, web
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...