×

மதுரையில் திமுக மாஜி எம்எல்ஏ வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு

மதுரை: மதுரை மாவட்ட திமுக முன்னாள் செயலாளராகவும், தற்போது மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராகவும் இருப்பவர் வேலுசாமி (71). முன்னாள் எம்எல்ஏ. இவர், மதுரை அண்ணாநகரிலுள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு, மனைவி ராஜாத்தி, மருமகன் டாக்டர் சுரேஷ் ஆகியோருடன் வீட்டில் இருந்தார். வீட்டின் கதவு, காம்பவுண்டு சுவரிலுள்ள 7 அடி உயர இரும்பு கேட்டும் பூட்டி இருந்தது. அப்போது திடீரென்று பயங்கர அதிர்வுடன் வெடி சத்தம் கேட்டது. உடனே வேலுசாமியும், அவரது மனைவியும் வெளியே வந்து பார்த்தபோது, காம்பவுண்டுக்குள் கரும்புகை வந்தது. வெடிகுண்டு வீசப்பட்டு வெடித்து இருப்பதை உணர்ந்தனர். அண்ணாநகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், துணை கமிஷனர் கார்த்திக் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர்.

வெடிகுண்டு வெடித்ததில் வீட்டு காம்பவுண்டுக்குள் நின்ற காருக்கோ, வெளியே நிறுத்தி இருந்த காருக்கோ சேதம் இல்லை. இரும்பு கேட்டில் லேசான ஓட்டை விழுந்து இருந்தது. விசாரணையில் 2 பேர் டூவீலரில் வந்து வீட்டுக்குள் வெடிகுண்டு வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. அவர்கள் யார். ஏன் வீசினார்கள் என்பது தெரியவில்லை. அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். அப்பகுதி சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்படுகிறது. மதுரையில் பட்டப்பகலில் முன்னாள் எம்எல்ஏ வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Bomb explosion ,MLA ,DMK ,house ,explosion ,Madurai Bomb ,Madurai , Madurai, DMK Magi MLA, Bombardment
× RELATED திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம்...