×

நாடாளுமன்ற துளிகள்

* நிதி ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
மத்திய பட்ஜெட் குறித்து, நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பல துறை மானியக் கோரிக்கைகளும் இதில் விவாதிக்கப்படும். பட்ஜெட் கூட்டம் முடிவடைய குறைவான கால அவகாசம் இருந்தால், இந்த மானியக் கோரிக்கைகள் அவையில் விவாதிக்கப்படாமல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். மத்திய அரசு செயல்படுவதற்கும், மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதற்கும் மத்திய தொகுப்பு நிதியிலிருந்து ரூ.110 லட்சம் கோடி எடுக்கும் நிதி ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

* பெட்ரோல், டீசல் மீதான கலால், சாலை வரி உயர்வு
மக்களவையில் நேற்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் 3 அறிவிப்புக்களை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பெட்ரோல். டீசல் மீது கூடுதல் கலால் வரி விதிக்கப்படுகிறது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோல் டீசல் மீதான கலால் வரி ரூ.2ல் இருந்து ரூ.4 ஆக உயர்த்தப்படுகிறது. 2வது அறிவிப்பாக சாலை மற்றும் உள்கட்டமைப்பு வரியும் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி சாலை வரி பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.1ம், டீசலுக்கு ரூ.10ம் அதிகரிக்கப்படுகிறது. இது தவிர பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் கலால் வரியை உயர்த்தியும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வரி பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ரூ.9ல் இருந்து ரூ.10 ஆக அதிகரிக்கப்படுகிறது. கலால் வரி உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைக்கப்படும் நிலையில் அரசு கூடுதல் கலால் வரி விதிப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.

* சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல்
`மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா 2019’ஐ நேற்று மாநிலங்களவையில் மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிமுகம் செய்தார். ஏற்கனவே இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் சில திருத்தங்களுடன் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அவையில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி தற்போது நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக உள்ள ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான், ஸ்ரீலால் பகதூர் சாஸ்திரிய ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடம், மற்றும் திருப்பதியில் உள்ள ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடம் ஆகிய 3 பல்கலைக்கழகங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்படும். திருத்தங்கள் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால் மக்களவையில் மீண்டும் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்படும்.

Tags : Parliament , Parliament, drops
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...