×

திருமுல்லைவாயல் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குப்பை கொட்டும் மாநகராட்சி நிர்வாகம்: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி

சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மாநகராட்சி நிர்வாகமே பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து வகை குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், நேதாஜி நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 30 பிளாக்குகளில் 120 வீடுகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்புகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்துக்கு உள்ளேயே பசுமை உரக்குடில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உரக்குடிலுக்கு மக்கும் குப்பைகளை மட்டும் கொண்டு வர வேண்டும். பின்னர், அதனை ஊழியர்கள் எந்திரங்கள் மூலம் அரைத்து பொடியாக்கி விடுவார்கள். அதன்பிறகு, நுண்ணுயிர் திரவத்தை தெளித்து 42நாட்கள் தொட்டிகளில் ஊறவைப்பார்கள்.

பின்னர், அந்த குப்பைகள் உரமாகி விடும். இந்த உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாகவும், பொதுமக்களுக்கு ஒரு கிலோ ரூ.3க்கும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த பசுமை உரக்குடிலுக்கு மக்கும் குப்பைகளை மட்டும் கொண்டு வரவேண்டும். அதனை விடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் மக்காத குப்பைகளையும் கொண்டு வந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கொட்டி வைத்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், திருமுல்லைவாயல் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள், பல லட்சங்களை செலவு செய்து வீடுகளை வாங்கி வசித்து வருகிறார்கள். இங்கு பசுமை குடில் அமைக்கும் போதே குடியிருப்புவாசிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தோம்.
அதனையும் மீறி அப்போதைய நகராட்சி நிர்வாகம் குடியிருப்புவாசிகளை போலீசாரை வைத்து மிரட்டி பசுமை உரக்குடிலை   அமைத்தது. தற்போது அங்கு பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட அனைத்து குப்பைகளும் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

இதனால் குடியிருப்பு வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூக்கைப் பொத்தி கொண்டு வீட்டுக்குள் வசிக்கும் அவலநிலை உள்ளது. இதோடு மட்டுமில்லாமல், குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து  உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதால்  பல்வேறு வகையான மர்ம காய்ச்சல் ஏற்படுகின்றன. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளை பன்றிகள், நாய்கள் கிளறி விடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இனி மேலாவது திருமுல்லைவாயல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்துக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும், பசுமை உரக்குடிலை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், அங்கு மக்கும் குப்பைகளை மட்டும் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மாநகராட்சிக்கு அபராதம் விதிப்பது யார்
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகமே குப்பைகளை தெருக்களில் கொட்ட கூடாது, மீறி கொட்டினால் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என கூறி, அபராதம் விதித்து வருகிறது. விதியை மீறி அவர்களே  குப்பைகளை குடியிருப்பு வளாகத்தில் கொட்டி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகின்றனர். இது எந்த வகையில் நியாயம். மேலும், சட்டவிதிகளை மீறும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது யார் என  கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags : Corporation ,Administration ,Garbage Municipal Corporation ,People Avadi , Thirumullaivayal, Corporation, People Avadi
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...