தீபாவளி பண்ட் நடத்தி 22 லட்சம் மோசடி: தம்பதிக்கு வலை

திருவொற்றியூர்: எண்ணூரில் தீபாவளி பண்ட் நடத்தி 22 லட்சத்துடன் தலைமறைவாகியுள்ள கணவன், மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். எண்ணூர் உலகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவரது மனைவி கவிதா (35). இவர்கள் இருவரும் அப்பகுதியில் கடந்த ஆண்டு தீபாவளி பண்ட் பிடித்து, அங்குள்ள மக்களிடம் 22 லட்சத்தை வசூலித்தனர். பின்னர் அப்பணத்துக்கான பொருட்களையோ தொகையையோ தராமல் இழுத்தடித்து வந்தனர்.

இதுகுறித்து எண்ணூர் காவல் நிலையம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியவற்றில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் 22 லட்சத்துடன் அந்த தம்பதி தலைமறைவாகி விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், தீபாவளி பண்ட் மோசடியில் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு எண்ணூர் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தலைமறைவான கணவன், மனைவியை பிடித்து, தங்களுக்கு உரிய பணத்தை பெற்று தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் சம்பந்தப்பட்ட தம்பதியை கைது செய்து, அவர்களிடம் தீபாவளி பண்ட் பணத்தை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறினர். இதை ஏற்று அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>