×

நிர்பயா பலாத்கார கொலை வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளிகள் 3 பேர் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் 3 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு தடை விதிக்க கோரி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  
டெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயாவை 6 பேர் கும்பல் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்து கொலை செய்து வீசியது. இதில் ஒரு சிறுவன் தனது 3 ஆண்டு சிறை தண்டனை முடிந்ததை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டான். ராம் சிங் என்ற குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து ெகாண்டான். இதையடுத்து இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர்   தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இந்த நிலையில் பலமுறை தூக்கு தண்டனைக்கான தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், கடந்த 5ம் தேதி முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் சிங் ஆகிய 4 பேருக்கும் வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய ஆணையை விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில் முகேஷ் சிங் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் முந்தைய தனது வழக்கறிஞர் விருந்தா குரோவரின் தவறான வழிகாட்டுதல் காரணமாக உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனு மற்றும் ஜனாதிபதியிடம் தாக்கல் செய்த கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசு மற்றும் மத்திய அரசு இந்த வழக்கில் செய்த கிரிமினல் சதி மற்றும் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் விசாரிப்பதற்கான தேவை எதுவும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.  இதைத் தொடர்ந்து நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை அக்‌ஷய் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய 3 குற்றவாளிகள் நாடியுள்ளனர். அதில் `தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : court , Nirbhaya, guilty, prosecution
× RELATED உச்ச நீதிமன்றத்தில் ஜூலை முதல்...