×

ஆளுநர் உத்தரவிட்டும் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவில்லை: இன்று நடத்த மீண்டும் உத்தரவு

போபால்: ஆளுநர் உத்தரவிட்டும், கொரோனா வைரஸை காரணம் கூறி மத்தியப் பிரேதச சட்டப்பேரவையை 26ம் தேதி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி, முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவாளர்களாக இருந்த 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து சட்டப்பேரவையில், நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த, ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவு பிறப்பித்திருந்தார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

ஆளுநர் லால்ஜி டாண்டன் தனது வழக்கமான உரையை வாசித்தார். 2 நிமிடங்களுக்குள் தனது உரையை முடித்துக் கொண்டார். அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு விடுத்த வேண்டுகோளில், மாநிலத்தில் நிலவும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அனைவரும் அரசியல்சாசன விதிமுறைகளை பின்பற்றி, ஜனநாயக பாண்பை காப்பாற்ற வேண்டும் என்றார். ஆளுநர் தனது உரையை முடித்ததும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என பா.ஜ எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு எதிராக ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர். இந்த அமளிக்கு இடையே பேசிய சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் கோவிந்த் சிங், ‘‘கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இதனால் சட்டப்பேரவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல மாநிலங்களில் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது’’ என்றார். இவரது கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவையை வரும் 26ம் தேதிவரை ஒத்திவைப்பதாக சபாநயகர் பிரஜாபதி உத்தரவிட்டார். சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாததால், இன்று வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் கமல்நாத்துக்கு, ஆளுநர் லால்ஜி டாண்டன் மீண்டும் உத்தரவிட்டார். ஆனால் சட்டப்பேரவை வரும் 26ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ஆளுநர் நேற்று பிறப்பித்த உத்தரவும் வீணானது.

எம்.எல்.ஏக்கள் சிறைபிடிப்பால் ஓட்டெடுப்புக்கு வாய்ப்பில்லை
ஆளுநர் லால்ஜி டாண்டனுக்கு, முதல்வர் கமல்நாத் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கர்நாடக போலீஸ் உதவியுடன், பா.ஜ.வினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதை நான் கடந்த 13ம் தேதி அன்றே உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தேன். அவர்கள் வெவ்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் இல்லாமல் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வாய்ப்பில்லை. அவ்வாறு நடத்தினால், அது அரசியல் சாசனத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘எங்களுக்கு பெரும்பான்மை இல்லை என கூறி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி பா.ஜ. கோரினால், அவர்கள் முதலில் எனது அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால், நாங்கள் எங்கள் பெரும்பான்மையை நிருபிப்போம்’’ என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் மனு
பாஜ.வை சேர்ந்த ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 9 பா.ஜ எம்.எல்.ஏ.க்கள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். முதல்வர் கமல்நாத் அரசு சிறுபான்மை அரசாகிவிட்டது. அது ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை. சிறுபான்மை அரசை, பெரும்பான்மையாக்க, முதல்வர் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்கிறார். குதிரைப்பேரம் உச்சக்கட்டத்தில் உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைத்தால், குதிரைப்பேரம் அதிகரிக்கும். அதனால் ஆளுநர் உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த ம.பி சபாநாயகர், முதல்வர் மற்றும் சட்டப்பேரவை முதன்மை செயலருக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநருடன் திக்விஜய்சிங் சந்திப்பு
மத்தியப் பிரதேசத்தில் சிக்கலான அரசியல் சூழல் நிலவும் நிலையில் ஆளுநர் லால்ஜி டாண்டனை, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் நேற்று சந்தித்து பேசினார். அதன்பின் பேட்டியளித்த அவர், ‘‘எனக்கு ஆளுநர் லால்ஜி டாண்டனை பல ஆண்டுகளாக தெரியும். நாங்கள் அரசியல் குறித்து விவாதிக்கவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு’’ என்றார்.

ஆளுநர் வீட்டில் பா.ஜ எம்.எல்.ஏ.க்கள்
மத்தியப் பிரதேச சட்டப்பேரவை வரும் 26ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டதால், பா.ஜ எம்.எல்.ஏ.க்கள் 106 பேரும் நேற்று மதியம் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பின் பேட்டியளித்த பா.ஜ முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘‘பா.ஜ.வுக்கு பெரும்பான்மை உள்ளது’’ என்றார்.

Tags : Governor ,Madhya Pradesh Legislative Assembly , Governor, Madhya Pradesh Legislative Assembly, Faith Referendum, Order
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...