×

தெலங்கானா சட்டப்பேரவையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

திருமலை: தெலங்கானா சட்டப்பேரவையில் சிஏஏ, என்ஆர்சி,  என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ, என்ஆர்சி,  என்பிஆர் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளத. இதை கண்டித்து, புதுவை, மேற்குவங்கம், கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தெலங்கானா சட்டப்பேரவையிலும் நேற்று இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு  முன்னதாக பேரவையில் முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாவது: சிஏஏ தொடர்பாக நாட்டில் பல மாதங்களாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது.  மேலும் மதச்சார்பின்மைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிஏஏ மசோதாவை தாக்கல் செய்தபோது நாடாளுமன்றத்தில் நாங்கள் எதிர்த்தோம்.  ஏற்கனவே ஏழு மாநிலங்கள் சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில்  தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.

சிஏஏ குறித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. எனவே இதுகுறித்து நம் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சிஏஏ,  என்ஆர்சி மற்றும் என்பிஆர் சட்டம் குறித்து  தெளிவான புரிதல் இருப்பதால் நாங்கள் எதிர்க்கிறோம். அமெரிக்க அதிபர், நாட்டின் தலைநகர் டெல்லிக்கு வந்தபோது இதனால் கலவரம் ஏற்பட்டது. ஒவ்வொருவரிடமும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. இந்த வாக்காளர் அடையாள அட்டை மூலமாகவே எம்எல்ஏ, எம்பி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். முதல்வர், பிரதமர் வரை அனைத்தும் வாக்காளர்களின் வாக்குகள் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வாக்காளர் அட்டை செல்லாது என்று கூறுவது எவ்வாறு பொருத்தமாக இருக்கும்.

மேலும், அரசால் வழங்கக்கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார்,  டிரைவிங் லைசென்ஸ் போன்ற எதுவுமே செல்லாது என்று சொல்கின்றனர். எனவேதான் இந்த சட்டத்துக்கு பல நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பலர் தங்களுக்கு வழங்க கூடிய விருதுகளை புறக்கணித்துள்ளனர். பிரிவினை அரசியல் இந்த நாட்டிற்கு அவசியமா? ஒவ்வொருவருக்கும் குடியுரிமை இருக்க வேண்டும். மெக்சிகோ நாட்டினர் வராமல் இருப்பதற்காக அமெரிக்கா தடுப்பு சுவரை கட்டியது. எனவே இந்திய எல்லை பகுதியில் தடுப்பு சுவரை கட்டுவீர்களா? யாராவது எதிர்த்து பேசினால் தேச துரோகியாகவும் பாகிஸ்தான் ஏஜென்ட் என்று கூறுகிறீர்கள்? இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.

முதல்வர் சந்திரசேகர ராவ் பேசுகையில், ‘‘எனது பிறப்பு சான்றிதழ் என்னிடம் இல்லை. அப்படிப்பட்ட நிலையில் எனது தந்தையின் பிறப்புச் சான்றிதழை நான் எங்கிருந்து கொண்டு வருவேன். இவ்வாறு உள்ள நிலையில் நாட்டில் உள்ள பல கோடி மக்கள் எப்படி கொண்டு வருவார்கள். எனது நிலைமையே இவ்வாறு உள்ள நிலையில் சாமானிய மக்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்” என்றார்.

Tags : Telangana Assembly ,CAA ,NPR Telangana ,NRC ,Assembly ,NPR ,Resolution , Telangana, Assembly, CAA, NRC, NPR, Resolution, Execution
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...