×

குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 கோடி மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல்: குன்றத்தூர் அருகே பரபரப்பு

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் சட்ட விரோதமாக குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 7 டன் எடையுள்ள 2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (52). இவருக்கு குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் சொந்தமாக குடோன் ஒன்று உள்ளது. அதனை வாடகைக்கு விடுவதற்காக விளம்பரம் செய்தபோது, பெரம்பூரைச் சேர்ந்த குமார் (42) என்ற நபர், தான் பருப்பு வியாபாரம் செய்வதற்கு வாடகைக்கு எடுத்துக் கொள்வதாகவும் கூறி, குடோனை உபயோகப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் மூன்று மாதம் ஆகியும் பேசிய வாடகையை குமார் தராததால், சந்தேகமடைந்த குடோன் உரிமையாளர் வேலுச்சாமி, நேற்று முன்தினம் வந்து பார்த்துள்ளார். அப்பொழுது, குடோனில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் சரக்கு லாரி ஒன்று கேட்பாரற்று நின்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த வேலுச்சாமி அந்த லாரியை திறந்து பார்த்த போது, அதில் சுமார் ஏழு டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வேலுச்சாமி, இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு செம்மரக் கட்டைகளுடன் நின்றிருந்த லாரியையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து திருபெரும்பதூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த போலீசார், அவர்கள் வந்ததும் தாங்கள் கைப்பற்றிய செம்மரக்கட்டையை லாரியுடன் ஒப்படைத்தனர். சட்ட விரோதமாக செம்மரங்களை பதுக்கி வைத்திருந்த குமார் உள்ளிட்ட நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட செம்மர கட்டைகளின் மதிப்பு சுமார் 2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.


Tags : Kundathoor Kundathoor ,Parabharam , Kundathoor, 2 crores, sheep, confiscation
× RELATED ஊரடங்கில் வேலை இல்லாததால் கர்ப்பிணி...