×

சூப்பர் டிவிஷன் ஹாக்கி தெற்கு ரயில்வே வெற்றி

சென்னை: சூப்பர் டிவிஷன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில்  தெற்கு ரயில்வே 2-1 என்ற கோல் கணக்கில் வருமான வரித்துறை அணியை வீழ்த்தியது. சூப்பர் டிவிஷன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூர் ஹாக்கி  அரங்கத்தில் நடக்கிறது. நேற்று நடந்த முதல் ஹாக்கிப் போட்டியில் தெற்கு ரயில்வே - வருமான வரித்துறை அணிகள் விளையாடின. ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட இரண்டு அணியினரும் மாறிமாறி  கோல் முனையிலேயே பெரும்பாலும் முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

தொடர்ந்து 2வது பாதியில்  கூடுதல் வேகம் பெற்ற தெற்கு ரயில்வே 52வது நிமிடத்தில்  மேலும் ஒரு கோல் அடித்தது. அதன்பிறகு வருமான வரித்துறை மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. முடிவில்   தெற்கு ரயில்வே 2-1 என்ற கோல் கணக்கில் வருமான வரித்துறையை வீழ்த்தியது. தெற்கு ரயில்வே அணியின் வர்மா, கவுதமன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். வருமானத்துறை சார்பில் அருண்குமார் கோல் போட்டார். அடுத்து நடைபெறுவதாக இருந்த ஏஜிஎஸ் - தமிழ்நாடு போலீஸ் இடையிலான போட்டி, செயற்கைப் புல்தரையில் தண்ணீர் பாய்ச்சும் பிரச்னை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இன்று நடைபெறும் லீக் போட்டியில்  இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), இணைப்பு பெட்டித் தொழிற்சாலை (ஐசிஎப்) - இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) அணிகள் விளையாடுகின்றன.

Tags : Super Division Hockey Southern Railway ,Southern Railway , Super Division, Hockey, Southern Railway, Win
× RELATED இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்...