×

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: 7.5 லட்சம் கோடி இழப்பு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் நேற்றும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 2,700 புள்ளிகளுக்குமேல் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு நேற்று காலையிலேயே 15 நிமிடங்களில் 6 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. வர்த்தக முடிவில் இந்த இழப்பு 7.5 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. கொரோனா வைரஸ் காரணமாக பங்குச்சந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தக துவக்கத்திலேயே 3,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

இதையடுத்து இந்த சரிவை தடுக்கும் வகையில் வர்த்தகம் 45 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இவ்வாறு பங்குச்சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு பங்குச்சந்தை படிப்படியாக சரிவில் இருந்து மீளத்தொடங்கியது. வர்த்தக முடிவில். மும்பை பங்குச்சந்தை 1,325.34 புள்ளிகள் உயர்ந்தது. இருப்பினும் அன்று காலையில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு 12 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 6,027 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றனர்.

வாரத்தின் முதல் நாளான நேற்று காலை வர்த்தகம் துவங்கியபோதே பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 9,500 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. ரிசர்வ் வங்கியின் மீட்பு நடவடிக்கையால் யெஸ் வங்கி பங்கு மதிப்பு உயர்ந்தது. வோடபோன், டாடா மோட்டார்ஸ் பங்குகளும் உயர்ந்தன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆசிய பங்குச்சந்தைகள் சரிந்தன. சர்வதேச சந்தைகளும் பாதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு நீடித்தது. கொரோனா வைரசால் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை மீட்க, அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை ஏறக்குறைய பூஜ்யம் சதவீதமாக குறைத்து விட்டது. ஆனால், இந்த நடவடிக்கை பங்குசந்தையின் வீழ்ச்சியை மேலும் தீவிரம் அடையச் செய்து விட்டது. உலக அளவில் பொருளாதார பாதிப்பு மிக அதிரித்தற்கான குறியீடாகவே முதலீட்டாளர்கள் கருதினர். நேற்று மதியம் நிப்டியில் யெஸ் வங்கியை தவிர பிற பங்குகள் அனைத்தும் சரிந்தன. நிப்டி 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 9,300 புள்ளிகளாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி நேற்று வர்த்தக துவக்கத்தில் 9,587.80 புள்ளிகளாக இருந்தது. அதிகபட்சமாக 9,602.20 புள்ளிகள் வரை உயர்ந்தாலும், அதிகபட்சமாக 9,165.10 புள்ளிகள் வரை சரிந்தது. முடிவில் முந்தைய நாளை விட 757.80 புள்ளி சரிந்து 9,197.40 புள்ளிகளானது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை  முடிவில் 34,103.48 புள்ளிகளாக இருந்தது. ஆனால் நேற்று வர்த்தகம் துவங்கியதும் 33,103.24 புள்ளிகள் என சரிவுடனேயே துவங்கியது. அதிகபட்சமாக 2,827.18 புள்ளிகள் சரிந்தது. வர்த்தக முடிவில், கடந்த வார இறுதியை விட 2,713.41 புள்ளி சரிந்து 31,390.07 ஆக இருந்தது.

இதனால் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு 7,62,290.23 கோடி சரிந்து, 1,21,63,952.59 கோடியானது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74.25 இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, ஓட்டல், மால்கள், தியேட்டர்கள் மூடலால் ஏற்பட்ட தொழில் பாதிப்பு, வெளிநாட்டு நிறுவன முதலீ–்ட்டாளர்கள் இதுவரை 35,000 கோடிக்கு மேல் வெளியேற்றியது, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தலா ₹3 உயர்த்தியதால் விலைவாசி அதிகரிக்கலாம் என்ற அச்சம், பெடரல் வங்கி வட்டி குறைப்பால் சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றின் தொட்ச்சியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Stock market crash , Stock market, fall, 7.5 lakh crore, loss
× RELATED பங்குச்சந்தை கடும் சரிவு: 5.8 லட்சம் கோடி இழப்பு: மாபெரும் சந்தை சரிவுகள்