×

பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை: வட்டி குறைப்பு பற்றி பரிசீலிக்கப்படும்: ரிசர்வ் வங்கி கவர்னர் உறுதி

மும்பை: இந்த மாத இறுதியில் துவங்கும் நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டத்தில் வட்டி குறைப்பு பற்றி முடிவு செய்யப்படும். இதுபோல், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் சுற்றுலா, விமான துறை, ஓட்டல்கள் உட்பட பெரும்பாலான துறைகள் முடங்கி கிடக்கின்றன. பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதோடு, இந்திய பங்குச்சந்தைகளும் நாளுக்கு நாள் கடுமையாக சரிந்து வருகின்றன. நேற்றும் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டதால், முதலீட்டாளர்கள் 7.5 லட்சம் கோடிக்கு மேல் இழந்தனர். இதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டியளிக்க உள்ளார் என நேற்று காலை தகவல் வெளியானதும், பெடரல் ரிசர்வ் வங்கி போல குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வட்டி குறைப்பு தொடர்பாக தற்போது எந்த முடிவும் கூற முடியாது.

இந்த மாதம் 31ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடக்கிறது. அதில் வட்டி குறைப்பு பற்றி கண்டிப்பாக பரிசீலிக்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து அந்நிய செலாவணி மற்றும் கடன் சந்தைகளும் தப்பவில்லை. இருப்பினும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை போக்குவதில் ரிசர்வ் வங்கி தயக்கம் காட்டவில்லை. இந்த மந்த நிலையை மாற்றும் வகையில் கொள்கை முடிவுகள் வகுக்கப்படும் யெஸ் வங்கியில் உள்ள பணம் பத்திரமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் அச்சப்பட தேவையில்லை. அவசரப்பட்டு பணத்தை எடுக்க வேண்டாம் என்றார்.

Tags : governor ,RBI , Reduction of interest, Reserve Bank, Governor, surety
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...