×

நவீனமயமாகிறது பழநி கோயில் தங்கும் விடுதிகள்: சீரமைக்க நிர்வாகத்தினர் முடிவு

பழநி: பழநி கோயிலில் உள்ள தங்கும் விடுதிகளை சீரமைத்து நவீனப்படுத்த கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் தண்டபாணி நிலையம், சின்னக்குமாரர் விடுதி, இடும்பன் குடில்கள், வேலவன் விடுதி உள்ளிட்ட இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் கோயில் நிர்வாகம் சுமார் 1500க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பல்வேறு வகையான அறைகள் மிகவும் குறைந்த விலைக்கு கோயில் நிர்வாகத்தால் வாடகைக்கு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த அறைகளை சீரமைத்து நவீனப்படுத்த, கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இடும்பன் குடில்கள் பகுதியில் புதிய அறைகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தனியார் லாட்ஜ்களுக்கு இணையாக கோயில் நிர்வாகத்தின் கீழ் தங்கும் விடுதிகளில் உள்ள அறைகளை நவீனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றவுடன் பணிகள் துவங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது அடிவார பகுதியில் பல வீடுகள் விடுதிகளாக மாறிவிட்டன. இங்கு உரிய விதிகள் பின்பற்றப்படாமல் அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்களின் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் தங்கும் விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்திருப்பது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கோயில் நிர்வாகம் அறைகள் நவீனப்படுத்தும் பணியை விரைவில் துவங்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palani Temple , Palani Temple, PG Paying Guest Accommodation
× RELATED கோயில் ஆக்கிரமிப்பை அகற்றாததால்...