×

கொரோனா, பறவை காய்ச்சல் அச்சுறுத்தல்; நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட 22 மாவட்டத்தில் விளைபொருள் விலை சரிவு: விவசாயிகள் கவலை

கோவில்பட்டி: கொரோனா  வைரஸ், பறவை காய்ச்சல் எதிரொலியாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட 22 மாவட்டங்களில் விளைப்பொருட்கள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மானாவாரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களை தவிர்த்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம் போன்ற மானாவாரி பயிர்களை பயிரிட்டனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1.70 லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களில் இவற்றை பயிரிட்டனர்.

இதையடுத்து கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் அறுவடை பணிகளில் ஆர்வம் காட்டினர். இருப்பினும் இவற்றை வீடுகளில் வைக்க இயலாதவர்கள், பொருளாதார வசதியில்லாத விவசாயிகள் உடனுக்குடன் விற்று வருகின்றனர்.இருப்பினும் தற்போது கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் எதிரொலியாக பெரும்பாலான விளைப் பொருட்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. உரிய நியாயமான விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதனிடையே மக்காச்சோளம், வெள்ளை சோளம், கம்பு, கொத்தமல்லி போன்ற விளைப்பொருட்களை ஒரு சில விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர்.

இவற்றுக்கு சந்தைகளில் இன்னும் ஒரு மாதம் கழித்து உரிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பு வைத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு மக்காச்சோளம் ரூ.2400க்கும், வெள்ளை சோளம் ரூ.2200க்கும், கம்பு ரூ.2400க்கும் விலை விற்பனையானது. தற்போது ஒரு மாதமாக குவிண்டாலுக்கு மக்காச்சோளம் ரூ.1250க்கும், வெள்ளை சோளம் ரூ.1300க்கும், ஒட்டு கம்பு ரூ.1600க்கும் விலை போவதால் கடந்த ஆண்டை போல் இந்தாண்டுக்கு விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இவ்வாறு இருப்பு வைத்துள்ளனர்.

விளைப்பொருட்கள் விலையில் ஏற்பட்ட கடும் சரிவை அடுத்து பெரும்பாலும் மக்காச்சோளம், வெள்ளைசோளம், கம்பு போன்றவைகள் தின்பண்டங்களுக்கும், பிஸ்கெட்டுகளுக்கும், பாப்கான் மற்றும் சேவு போன்ற தின்பண்டங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் கால்நடை தீவனத்திற்கும், கோழித்தீவனத்திற்கும் மக்காச்சோளம், வெள்ளைசோளம், கம்பு போன்ற பயிர்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நாமக்கல் உள்ளிட்ட தமிழகமெங்கும் உள்ள கோழிப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கோழிக்குஞ்சுகள் பறவை காய்ச்சல் தாக்குதலால் அழிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவும் கம்பு, மக்காச்சோளம்,

வெள்ளைசோளம் போன்ற தீவனங்களை வாங்குவதற்கு பெரும்பாலான சந்தைகளில் ஆளில்லை என்றும் வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு அரசு புத்துயிர் அளிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் மக்காச்சோளம், வெள்ளை சோளம் மற்றும் கம்பு போன்ற விளைபொருட்களுக்கான விலை தானாகவே உயர வாய்ப்புள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ள விவசாயிகள், தற்போது பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உதவிட வேண்டும் என கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Corona ,districts ,Thenkasi Corona ,Thoothukudi ,Tenkasi ,Paddy , Corona, Bird Flu, Paddy, Tuticorin, Tenkasi, Commodity Price Decline
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...