×

‘கடவுளே கொரோனாவில் இருந்து காப்பாற்று’ ஊரை விட்டு வனவாசம் சென்று வழிபட்ட கிராம மக்கள்: ஆற்காடு அருகே நூதன வேண்டுதல்

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சாத்தூர் கிராமம். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சமீப காலமாக கிராம மக்கள் மற்றும்  ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறதாம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இங்குள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் பெண் பக்தர் ஒருவர் அளித்த அருள்வாக்கில், ‘நோயின்றி வாழவும், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மழைவளம் பெருகவும் கோயிலில் 48 நாட்கள் அணையா அகண்ட தீபம் ஏற்றி வைத்து தினமும் வழிபட வேண்டும். பின்னர் ஒருநாள் வனவாசம் செல்ல வேண்டும்’ என்றாராம்.

அதன்படி நேற்றுமுன்தினம் வரை 48 நாட்கள் கோயிலில் அணையா அகண்ட தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். இதையடுத்து அனைவரும் வனவாசம் செல்ல முடிவு செய்தனர். அதன்படி, நேற்று அதிகாலை 5 மணிக்கு கிராம மக்கள் தங்களது கால்நடைகளுடன், புறப்பட்டனர். முன்னதாக எருமை மாட்டுக்கு மஞ்சள் ஆடை  கட்டி, கரகம் எடுத்து மேளதாளம் முழங்க  அனைவரும்  தெற்கு திசை நோக்கி ஊர் எல்லையை கடந்தனர். தொடர்ந்து அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டனர். ஆடு, பன்றி, கோழி பலி கொடுத்து அம்மனை வழிபட்டனர். மாலை 6 மணிக்கு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், எருமையை கிழக்கு திசையில் அனுப்பிவிட்டனர்.

பொதுமக்கள் அனைவரும் வனவாசம் சென்றதால் ஒரு நாள் கிராமம் வெறிச்ேசாடியது. இதுகுறித்து அப்பகுதி மக்க்ள கூறுகையில், மழை வளம் வேண்டியும், நோயின்றி வாழவும் இந்த வழிபாட்டை நடத்தினோம். மேலும் இந்த வழிபாட்டால் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவும் எங்களை தாக்காது’ என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags : God ,Corona ,Wilderness Worshiped Villagers Corona ,Villages ,Arcot , Corona, Wilderness, Villages, Arcot
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…