×

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை மூட அறிவுறுத்தல்: மத்திய அரசு

டெல்லி: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பள்ளிகள், நீச்சல் குளங்கள், மால்கள் போன்றவற்றை மார்ச் 31ம் தேதி வரை மூட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவின் வூகான் நகரத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாதது மக்களின் அச்சத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதற்கிடையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 114 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அதில்; நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மார்ச் 31 வரை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களையும் மார்ச் 31 வரை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனி நபர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதை பொதுமக்கள் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். இந்தியாவில் தற்போது வரை 114 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. கொரோனா பாதித்த 13 பேர் நோய் தாக்கத்தில் இருந்து குணமடைந்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.


Tags : institutions ,country , Corona, Educational Institutions, Federal Government
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரியில் 17வது ஆண்டு விழா