×

அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சகட்டம்; அமைச்சர், எம்எல்ஏ ஆதரவாளர்கள் இரும்பு பைப், கத்தியுடன் மோதல்: பண்ருட்டி அருகே பதற்றம்

பண்ருட்டி: அதிமுகவில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக பண்ருட்டி அருகே திருவதிகையில் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரும்பு பைப் மற்றும் கத்தியால் தாக்கியதில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந் தனர். இது தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (65). அதிமுக பிரமுகரான இவர் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர் ஆவார். அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் அரிகிருஷ்ணன் (38). அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதவாளர்.

இருவருக்கும் சில ஆண்டுகளாக கட்சி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை தட்சிணாமூர்த்தி, அவரது மனைவி மகாலட்சுமி, உறவினர் மகன் ஆகாஷ் (13) ஆகியோர் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த அரிகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் தட்சிணாமூர்த்தியிடம், எனக்கு எதிராக கட்சி நடத்துகிறாயா? என்று கேட்டு அசிங்கமாக திட்டி உள்ளனர். மேலும் கத்தி, இரும்பு பைப் ஆகியவற்றால் சரமாரி தாக்கி உள்ளார்.

இதில் தட்சிணாமூர்த்தி, அவரது மனைவி மகாலட்சுமி, உறவினர் மகன் ஆகாஷ் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து எம்எல்ஏ ஆதரவாளர்கள் கோவிந்தன், அய்யப்பன், தேவா, கோபு, அப்பு, ராஜா, மணிகண்டன், முத்து, செல்வம், சிவசங்கர் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இதே பிரச்னை தொடர்பாக எம்எல்ஏ ஆதரவாளர் அரிகிருஷ்ணன் அளித்த புகாரில், அமைச்சர் ஆதரவாளர்கள் பாலு, லோகநாதன், கருணாகரன், தட்சிணாமூர்த்தி, பாண்டியன், தீபன், தினேஷ், அய்யப்பன், மதியழகன், கிருஷ்ணா ஆகிய 10 பேர் தங்களை தாக்கியதாக கூறியிருந்தார். இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட அரிகிருஷ்ணன் பலத்த காயத்துடன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக திருவதிகை பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags : Climax Minister ,supporters ,MLA ,Panruti ,Amitamukhivi , Amitamukhivi, clusterfight, panrutti
× RELATED தீபாவளி பண்டிகை ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்கள், புத்தாடை