×

கொரோனா பீதி எதிரொலி; ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை பெருமளவில் சரிந்தது

ஊட்டி: சுற்றுலா மாவட்டமாக விளங்கும் நீலகிரியில் ஊட்டி தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா,குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா போன்றவை தோட்டக்கலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ளது. ஒவ்ெவாரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறும் சமயங்களில் சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைவாக காணப்படும். அதன் பின் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் களைகட்டியிருக்கும். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் பல்ேவறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்துள்ளது.

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவிற்கு கடந்த ஒரு வாரத்தில் 22 ஆயிரம் சுற்றுலா பயணிகளே வந்துள்ளனர். மேலும் ஊட்டி நகரில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்கள், காட்டேஜ்களில் பெரும்பாலான அறைகள் காலியாக உள்ளன. உள்ளூர் வியாபாரமும் பாதிப்படைந்துள்ளது. நவம்பர் முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் பனி சீசன் காலமாகும். இந்த சமயத்தில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். இம்முறை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அவர்களது வருகை வெகுவாக குறைந்துள்ளது.

ஏற்கனவே ஊட்டி வருவதற்காக முன்பதிவு செய்திருந்த வெளிநாட்டினரும், தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர். இதனால் ஓட்டல்கள், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வாடகை வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பூங்கா மூடல்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்கா அமைந்துள்ளது.  இந்த பூங்காவில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பூங்காவில் படகு வசதி, சிறுவர்களுக்கென ரயில், கொலம்பஸ், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இப்பூங்காவிற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பூங்கா மூடப்பட்டது.

கோவை குற்றாலம்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோவையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவை குற்றாலத்தில் வழக்கத்தை விட நேற்று சுற்றுலா பயணிகளின் வரத்து குறைவாக காணப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பீதியால் கோவை குற்றாலம், பரளிக்காடு ஒரு வார காலத்திற்கு மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணை செல்ல தடை
கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு  அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஈரோடு, கோவை, திருப்பூர்,  நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10 ஆயிரம்  சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொரோனா பீதியால் கொடிவேரி அணைக்கு சுற்றுலா  பயணிகள் செல்ல பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். நேற்று முதல் இந்த  உத்தரவு அமல்படுத்தப்பட்டது.


Tags : Tourist arrivals ,Corona Panic Echo ,Ooty , Corona, Ooty, tourists
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்