×

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா பீதியால் வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள், கோயில்கள்

பழநி/கொடைக்கானல்: கொரோனா பீதி காரணமாக பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. உலகம் முழுவதும் 159க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் 1.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், அங்கிருந்து தமிழகத்திற்கு வருவோர், தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி மலைக்கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கேரளாவில் இருந்து பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கம். தற்போது கொரோனா பீதி காரணமாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என பழநி கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கேரளாவில் இருந்து பழநிக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள், கார் மற்றும் வேன்கள் வருகின்றன.

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு, பரிசோதனைக்குப் பிறகே பழநிக்கு அனுமதிக்கப்படுகின்றன. பஸ்களில்  போக்குவரத்து கழகம் சார்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. டிரைவர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறைகள் இன்று முதல் வழங்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழநி கோயிலிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  வின்ச் நிலையம், ரோப்கார் நிலையம், படிவழிப்பாதை, யானைப்பாதைகளில் மருத்துவக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மலையேறும் பக்தர்களை தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். பழநியில் வழக்கமாக வார விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் கூட்டமிருக்கும். ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் குறைந்து பழநி கோயில் வெறிச்சோடி காணப்பட்டது. கொடைக்கானலிலும் கெடுபிடி கொடைக்கானல்: சர்வதேச சுற்றுலா மையமாக உள்ள கொடைக்கானலுக்கு பல மாநிலங்கள், பல நாடுகளில் இருந்து  வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் வைரஸ் தொற்றுகள் பரவுவதை தடுக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. கொடைக்கானலின்  நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் பரிசோதனை நேற்று துவங்கியது.

முன்னதாக கொரோனா வைர‌ஸ் குறித்து  கொடைக்கான‌ல் ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்தில் வருவாய்த் துறையினர், நகராட்சி  அலுவலர்கள், சுகாதாரத்துறையினர் கலந்து கொண்ட ஆலோச‌னை கூட்ட‌ம் நடந்தது. மார்ச் 31 வரை வைகை, சுருளி மூடல் தேனி: தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக  கூடும் வணிக வளாகங்கள், அனைத்து திரையரங்குகள், வைகை அணை பூங்கா,  கும்பக்கரை அருவி, மேகமலை, சின்ன சுருளி மற்றும் சுருளி அருவியில்  குளிக்கும் இடம் ஆகியவற்றை மார்ச் 31ம் தேதி வரை மூட  வேண்டும் என கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதனால்  இங்கு சுற்றுலாப் பயணிகள் மார்ச் 31ம் தேதி வரை அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலும் விடுமுறை நாளான நேற்று பக்தர்களின் வருகை குறைந்து, வெறிச்சோடி  காணப்பட்டன. மீனாட்சி அம்மன் கோயிலில் ஆங்காங்கே கிருமிநாசினி மருந்து  அடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும், ஏசி கோச்சில் கம்பளி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ரயில்களிலும், ஏசி கோச்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கம்பளி வழங்கப்பட மாடடாது. ஆனால், தலையணை, தலையணை உறைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tourist places ,Madurai ,Dindigul Tourist , Tourist places in and around Madurai
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...