×

வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்: ராகுல்காந்தி வலியுறுத்தல்!

டெல்லி: பல லட்சம் கோடி வங்கி கடன் பெற்று திருப்பி செலுத்தாத 50 பேரின் விவரம் பற்றி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி  எழுப்பியதால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. கேள்வி நேரத்தில் பேசிய ராகுல்காந்தி, நாட்டின் பொருளாதாரம்  மிகப்பெரிய சரிவை நோக்கி செல்வதாக எச்சரித்தார். வங்கிகள் திவால் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர்கள் பெயரை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து ராகுல்காந்தி தெரிவித்ததாவது, இந்திய பொருளாதாரம் மோசமான சூழலை நோக்கி செல்கிறது. வங்கி நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. பல வங்கிகள் திவால் நிலைக்கு செல்கின்றன. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் மக்கள் பணத்தை சிலர் கொள்ளையடித்துவிட்டனர். வங்கி பணத்தை திருடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் முதலிடத்தில் உள்ள 50 பேரின் விவரத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என தெரிவித்தார். ராகுல்காந்தி கேள்விக்கு அவையில் இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கவில்லை. அவருக்கு பதில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் பதிலளித்த போது காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவையில் எதிர்ப்புக்கு மத்தியில் பதிலளித்து பேசிய அமைச்சர் அனுராக் தாகூர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தான் வங்கி முறைகேடுகள் நடந்ததாக கூறினார். வங்கி கடன்களை திருப்பி செலுத்தாத நபர்களின் பெயர்கள் இணையதளத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து அமைச்சர் அனுராக் தாகூர், தெரிவித்ததாவது, கடன் பெற்றவர்கள் விவரத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கி கடன் பெற்று திருப்பி செலுத்தாத நபர்கள் விவரம் இணையதளத்தில் உள்ளது. கடன் பெற்றுவிட்டு தப்பியவர்கள் அனைவரும் முந்தைய ஆட்சியில் கடன் பெற்றவர்கள். ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக கடன் பெற்றவர்கள் விவரம் இணையதளத்தில் உள்ளது. விவரம் தெரியாமல் உறுப்பினர் கேள்வி கேட்டுள்ளார் என தெரிவித்தார். அனுராக் தாகூர், பதிலளித்த போது அவையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, ராகுல்காந்தி துணை கேள்வி ஒன்றினை எழுப்பிய போது சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


Tags : Rahul Gandhi ,banks , Bank credit, disappointment, name, to be released, Rahul Gandhi
× RELATED சொல்லிட்டாங்க…