×

அரசு மருத்துவமனையில் பூட்டிக்கிடக்கும் கழிவறையால் நோயாளிகள் கடும் அவதி

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் பூட்டிக்கிடக்கும் கழிவறைகளால் வெளிநோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் அரசு மருத்துவமனைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகாமையில் உள்ள சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 800க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி உள்ளனர். இது தவிர நாள் ஒன்றுக்கு 1000க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.உள் நோயாளிகளுக்கு அந்தந்த வார்டுகளில் கழிப்பறைகள் உள்ளன. ஆனால் வெளிநோயாளிகளுக்கு என்று அரசு மருத்துவமனை காவல்நிலையம் அருகே ஆண்கள், பெண்களுக்கு தலா 4 கழிவறைகள் வீதம் மொத்தம் 8 கழிவறைகள் கட்டப்பட்டிருந்தது. இதை முறையாக பராமரிக்கப்படாமல், கதவுகள் உடைந்தும், குழாய்களில் தண்ணீர் உடைப்பு ஏற்பட்டதாலும் திடீரென்று மருத்துவமனை நிர்வாகம் கழிவறைகளுக்கு பூட்டு போட்டுவிட்டது.

இதையடுத்து தற்காலிகமாக மாற்று ஏற்படாத அறை எண் 1க்கு அருகில் உள்ள கழிவறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.   
ஆனால் அங்குள்ள கழிவறையானது உள்நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் அட்டெண்டர்கள் பயன்படுத்தி வருவதால் வெளிநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே மருத்துவமனை வளாகத்தில் கழிப்பிட வசதி குறைவாக உள்ள நிலையில் பயன்பாட்டில் இருந்த 8 கழிவறைகளையும் மருத்துவமனை நிர்வாகம் பூட்டி வைத்துக்கொண்டதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பூட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை உடனடியாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு கூடுதலாக கழிவறைகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : government hospital , Government Hospital, Toilet, Patients
× RELATED முற்றுகை போராட்டம்