×

பழைய பேட்டை சமூகரெங்கையன் கட்டளை தெருவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் அவதி: மாநகராட்சி அதிகாரிகள் பாராமுகம்

பேட்டை: நெல்லை பழையபேட்டை சமூகரெங்கையன் கட்டளை தெருவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்ட நெல்லையின் ஒருசில பகுதி மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளான சீரான குடிநீர், சாலை, தெருவிளக்கு, வாறுகால், பாதாள சாக்கடை, சுகாதாரம் போன்றவை இன்னமும் கேள்வி குறியாகவும், கேலி கூத்தாகவும் உள்ளது. மக்களிடம் வரிப்பணத்தை வசூலிப்பதில் காட்டும் அக்கறையை அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் எள்ளளவும் இல்லாதது வேதனையாக உள்ளது. நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பழையபேட்டை சமூகரெங்கையன் கட்டளை தெருவில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் 178 பயனாளிகளுக்கு 1 சென்ட்டில் மனை ரூ.3 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு சிறிய அளவிலான வீடுகள் கடந்த 1998ல் கட்டி கொடுக்கப்பட்டன.

வீடுகளுக்கான பிரீமிய தொகை மாத தவணையாக ரூ.300 விகிதம் 14 ஆண்டுகள் வசூலித்த பின் பயனாளிகளுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டது.
டவுனையொட்டிய பகுதிகளில் அதிக வாடகை கொடுத்து குடும்பம் நடத்த முடியாத மிகவும் பின்தங்கியவர்கள் தங்களது பொருளாதார நிலையை கொண்டு அங்கு குடியேறினர். சொந்த வீடு கிடைத்த நிலையில் குடியேறியவர்களுக்கு சாலை, வாறுகால், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை.
சமூகரெங்கன் கட்டளை தெருவில் அமைந்துள்ள 13 குறுக்கு தெருக்கள் மிகவும் தாழ்வாகவும், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுவதால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தவிர பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்படும் அடைப்பால் கழிவுநீர் வெளியேறி நாட்கணக்கில் சாலையில் தேங்கி கிடப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும் நாய்கள் தொல்லையால் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது.

பொதுமக்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம், மக்காத குப்பைகளை சேகரிக்கும் குப்பை தொட்டியாக புதர்மண்டி காணப்படுகிறது. மக்களின் பொழுதுபோக்கிற்கென்று பூங்கா அமைத்திட ஒதுக்கப்பட்ட பகுதி கட்டுமான தொழிலுக்கு பயன்படும் பொருட்களை அடுக்கி வைக்கும் இடமாகவும், பல்வேறு பகுதிகளில் இடிக்கப்படும் வீட்டு கழிவுகளை வைக்கும் குடோனாகவும் உள்ளது. அப்பகுதிகளில் வாறுகால்கள் முறையாக அமைக்காததால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால்  துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் பாராமுகம் காட்டி வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் நீண்டநாள் எதிர்பார்பான சீரான குடிநீர், சாலை, வாறுகால், பாதாள சாக்கடை, பூங்கா உள்ளிட்ட அடிப்படை தேவைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.



Tags : Socioranganian Command Street , Old hood, basic amenities, corporation officials
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...