×

அறந்தாங்கி அருகே பனங்குளத்தில் பழக்கடையாக மாறிய பயணியர் நிழற்குடை

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே பனங்குளத்தில் பஸ் ஸ்டாப் நிழற்குடையில் பழக்கடை வைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் வெயிலில் நின்று பஸ்களில் ஏறி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ளது பனங்குளம். பனங்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, புகழ்பெற்ற குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். மேலும் பனங்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் சென்று வருகின்றனர்.
பனங்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் காத்திருந்து பஸ்களில் செல்வதற்கு வசதியாக திருவரங்குளம் ஒன்றியம் பனங்குளம் ஊராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.

குளமங்கலம் பெருங்காரையடிமீண்ட அய்யனார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிழற்குடையில் காத்திருந்து பஸ்களில் சென்று வந்தனர். இந்நிலையில் இந்த பயணியர் நிழற்குடையில் தனிநபர் பழக்கடை வைத்துள்ளார். பயணியர் நிழற்குடை பழக்கடையாக மாறியுள்ளதால், பயணிகள் வெயிலில் நின்றவாறே பேருந்துகளில் ஏறிச் செல்ல வேண்டி உள்ளது.எனவே திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக பனங்குளம் பயணியர் நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Tags : traveler ,Panangkulam ,Aranthangi , Panangulam ,Aranthangi, Traveler, silhouette
× RELATED கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது