×

450 ஆண்டு கால பாரம்பரியமான மதுரை தமுக்கம் மைதானத்தை மூட கடும் எதிர்ப்பு

* சித்திரை திருவிழாவில் வெளியூர் பக்தர்கள்
* ஓய்வெடுக்கும் இடத்தை பாழாக்க கூடாது

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தை மூட கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சித்திரை திருவிழாவில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் பாரம்பரிய இடத்தை அழித்து பாழாக்ககூடாது, வணிக வளாகம் எங்கும் கட்டலாம், நகருக்குள் மைதானம் உருவாக்க முடியாது” என்ற குரல் எழுந்துள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மதுரை தல்லாகுளத்திலுள்ள தமுக்கம் மைதானத்தில் புதிய கலையரங்கம், வணிக வளாகம் ரூ.45 கோடியில் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இந்த மைதானத்தின் முகப்பில் நுழைவு வாயில், மதுரையில் 1981ல் உலகதமிழ் மாநாடு நடைபெற்றபோது உருவாக்கப்பட்ட தமிழன்னை சிலை, சங்க கால தமிழ் புலவர்கள் நினைவு தூண், நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் சிலை அமைந்துள்ளது. மைதானத்தின் உள்பகுதியில் அழகிய கோபுரத்துடன் கூடிய கலையரங்கம், சிறிய அளவிலான கடைகள் அமைந்துள்ளன. மைதானத்தின் மொத்த பரப்பளவு 10 ஏக்கராகும். சுற்றிலும் காம்புண்டு சுவர் எழுப்பி 4 வாயில்கள் அமைந்துள்ளன. 4 ஏக்கரில் கலையரங்கம் உள்ளிட்ட கட்டிடங்களும், 6 ஏக்கர் மைதானமாகவும் உள்ளது. புதிய கலையரங்கம், வணிக வளாகம் கட்டுதற்காக மைதானம் மூடப்படுகிறது. இங்குள்ள கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்க இயந்திரங்கள் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமுக்கம் மைதானத்தை மூட கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் கூறியதாவது:- மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. மாநகராட்சி தேர்தல் எப்போது நடக்கும் என தெரியாது. 2021ல் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்டது. அதற்கு முன் அவசர, அவசரமாக பாரம்பரியம் மிக்க மதுரை தமுக்கம் மைதானத்தை மூடி, புதிய கலையரங்கம், வணிக வளாகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? ராணிமங்கம்மாள் உருவாக்கிய மைதானத்தை அடையாளம் தெரியாமல் அழிப்பது பெரிய தவறு. மதுரையில் இருந்த கண்மாய்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்களானதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்போது நகருக்குள் அமைந்த மைதானத்தையும் அழிப்பது பெரிய தவறு. சித்திரை திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் விடிய, விடிய தங்கி ஓய்வெடுக்கும் மைதானத்தை உருக்குலைத்து ஒழிக்க கூடாது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மைதானத்தில் நடைபெற்று வந்த சித்திரை பொருட்காட்சியை மாட்டுத்தாவணிக்கு மாற்ற வேண்டுமா? மக்களுக்காக மைதானம் பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

மதுரை எம்.பி. வெங்கடேசன் கூறும்போது, ‘பாரம்பரியம் மிக்க மைதானத்தை மூடக்கூடாது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்றார்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மதுரையின் பாரம்பரிய அடையாளங்களை அழிக்க கூடாது. மாநகராட்சி வணிக வளாக கட்ட முதலில் தேர்வு செய்த இடம் ரிங்ரோடு அருகிலுள்ள 8 ஏக்கர் பரப்பிலான பழத்தோட்டம் தான். அந்த இடத்தை விட்டுவிட்டு, தமுக்கத்தை பாழாக்ககூடாது. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட்டுக்கும், பூ மார்க்கெட்டுக்கும் நடுவில் மாநகராட்சிக்கு சொந்தமான 27 ஏக்கர் இடம் காலியாக கிடக்கிறது. அங்கு வணிக வளாகம் கட்டிக் கொள்ளலாம். ஆனால் சித்திரை பொருட்காட்சியை மாட்டுத்தாவணிக்கு மாற்றிவிட்டு, வணிக வளாகத்தை தமுக்கம் மைதானத்தில் கட்டுவது மர்மமாக உள்ளது. அடுத்து தமுக்கம் மைதானம் அருகிலுள்ள ராஜாஜி பூங்காவும் அழிக்கப்பட்டுவிடுமோ? என்ற அஞ்ச வேண்டிய உள்ளது. உடனடியாக தமுக்கம் மூடும் திட்டத்தை கைவிடத் தவறினால் மதுரையின் பாரம்பரியத்தை அழித்த பாவமாகிவிடும். வணிக வளாகம் எங்கும் கட்டிக் கொள்ளலாம், நகருக்குள் இவ்வளவு பெரிய மைதானம் சித்திரை திருவிழா நடக்கும் இடத்தில் உருவாக்க முடியுமா என்பதே கேள்வி ? இவ்வாறு கூறினர்.

450 ஆண்டுக்கு முன் உருவான மைதானம்
தமுக்கம் மைதானத்தை 450 ஆண்டுகளுக்கு முன் ராணிமங்கம்மாள் அரண்மனை (தற்போது காந்தி மியூசியம்) கட்டியபோது, யானை, குதிரைகளின் வீர விளைாட்டுக்காக பெரிய மைதானம் உருவாக்கினார், அதுவே தமுக்கம் மைதானம்.



Tags : protests ,closure ,stadium ,Madurai Thamkam ,Madurai Thamkam Stadium of Closure , Heavy protests ,closure , 450-year-old ,Madurai Thamkam stadium
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி...