×

அருப்புக்கோட்டையில் பராமரிப்பு இல்லாததால் பாசி படர்ந்து கிடக்கும் கோயில் தெப்பக்குளம்

* நீர்வரத்து பாதைகள் ஆக்கிரமிப்பு
* அறநிலையத்துறை கவனிக்குமா?

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 800 ஆண்டு பழமையான தெப்பக்குளம் பாசி படர்ந்து சுகாதாரக்கேடாக காட்சி தருகிறது.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலுக்கு சொந்தமான தெப்பம் உள்ளது. இக்குளத்தில் 7 படித்துறைகளும், சுற்றுப்பகுதியில் 3 கிணறுகளும், மையப்பகுதியில் 1 கிணறும் உள்ளது. அக்காலத்தில் சூரிய புஷ்கரணி என இதற்கு பெயர்.இந்த தெப்பக்குளத்தில் குளித்தால் தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்து விடும் என்பது ஐதீகம். இந்த தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும் போது 2006,2007, 2008ம் ஆண்டுகளில் தெப்ப உற்சவம் நடந்தது. மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர் உயர்ந்து இருக்கும். இதனால் தண்ணீர் பிரச்னை இருக்காது. மேலும் சொக்கலிங்கபுரம், வெள்ளக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், துவைப்பதற்கும் இந்த தெப்பத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் தெப்பம் கழிவுநீர் குட்டையாக, குப்பை கொட்டும் கிடங்காக மாறிவிட்டது. தற்போது பாசிபடர்ந்து தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடாக உள்ளது. ராமானுஜபுரம் காட்டுப்பகுதியில் மழை பெய்தால் மழைநீர் ஓடை வழியாக சொக்கலிங்கபுரம் தெப்பக்குளத்திற்கு வந்து சேரும்.ஆனால், தெப்பத்திற்கு தண்ணீர் வரும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி மூலம் எஸ்பிகே கல்லூரி ரோட்டில் இருந்து திருச்சுழி ரோடு வரை பிறமடை ஓடை லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஓடை சரிவர பராமரிப்பு செய்யாததால் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனாலும் மழைநீர் முழுமையாக தெப்பத்திற்கு வந்து சேரவில்லை.

தற்போது தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் பகுதியானது மிகவும் வலுவிழந்து மழைக்காலங்களில் ஏதேனும் ஒரு பகுதி சரிந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. மேலும் தெப்பக்குளத்தை சுற்றி தடுப்புவேலிகள் இல்லாததால் கழிவுப்பொருட்களை கொட்டி பாழ்படுத்தி வருகின்றனர். தெப்பக்குளத்திற்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்பிடிப்பு ஆதாரப்பகுதியாக ஆதிமுதல் தொன்றுதொட்டு நீராவி பிறமடை ஊரணி இருந்து வருகிறது.இதன் மூலம் தான் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வந்தடைய வேண்டும். நீராவி பிறமடை ஊரணிக்கு மழைநீர் வரும் ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால் போதிய மழை பெய்தும் தெப்பத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே, ஓடையை தூர்வாரி நீர்வழிகள் அடைப்பை அகற்ற நகராட்சி நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தெப்பக்குளத்தை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமானுஜபுரம்  காட்டுப்பகுதியில் மழை பெய்தால் மழைநீர் ஓடை வழியாக சொக்கலிங்கபுரம் தெப்பக்குளத்திற்கு வந்து சேரும். ஆனால், தெப்பத்திற்கு தண்ணீர் வரும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது

Tags : Aruppukkottai , Theppukulam,temple , covered , maintenance ,Aruppukkottai
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...