×

பெண் ஓட்டுனர்கள் அதிகம் தேர்வு ரயில் என்ஜினில் அடிப்படை வசதிகள் உருவாக்கப்படுமா?: டிஆர்இயூ வலியுறுத்தல்

ரயில்கள், விமானங்கள், லாரிகள், ஆட்டோக்கள் ஓட்டும் பணிகளில் குறைந்த அளவிலே பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணிகள் கடினமானவை என்பதே இதற்கு காரணம். இந்த சூழலில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களை சார்ந்த 1,280 பெண்கள்  ரயில் என்ஜின்கள் ஓட்டும் பணியான உதவி லோகோ பைலட் வேலைக்கு தற்போது தேர்வாகி இருக்கிறார்கள். இதில் உத்திர பிரதேசத்தில் 216 பேர், கேரளாவில் 145 பேர், ஆந்திராவில் 131 பேர், பீகாரில் 122 பேர், மகாராஷ்ராவில் 117 பேர், மேற்கு வங்காளத்தில் 110 பேர் என அதிக அளவிலும்,  குஜராத், அஸ்ஸாம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் மிகக் குறைவாக ஒற்றை இலக்கத்திலும் தமிழகத்தில் 43  பெண்களும் தேர்வாகி இருக்கிறார்கள்.ரயில் என்ஜின் லோகோ பைலட் பணியிடங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தேர்வாகியிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை. இதை பார்த்து வரும் காலங்களில் ஆயிரக்கணக்கில் இளம்பெண்கள் இந்த பணியில் சேரக்கூடும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைப் பொதுச் செயலாளர் மனோகரனிடம் கூடுதல் விவரங்கள் மற்றும் தொழிற் சங்க கருத்து குறித்து கேட்கையில் அவர் கூறியது, 1585 உயர் அதிகாரிகள், 18,407 கடைநிலை ஊழியர்கள், 66,508  இதர  பிரிவுகள்  என மொத்தம் 86 ஆயிரத்து 500 பெண் ஊழியர்கள்  ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்கள். இது தவிர இந்திய குடியியல் பணி அதிகாரிகள் 1103 பேர் பணியில் உள்ளார்கள். தற்போது 5500 டீசல் என்ஜின்களும், 5800 மின்சார என்ஜின்களும் சேர்த்து 11 ஆயிரத்து 300 ரயில் என்ஜின்கள் உபயோகத்தில் உள்ளன. இவைகளை இயக்க ஒரு லட்சத்து 6 ஆயிரம் லோகோ பைலட்டுகள் பணியாற்றுகிறார்கள். இரவு பகல் பாராமல் பணியாற்றும் கடினமான தொழில் நுட்ப பணி இது. இந்த பணியில் சேர மூன்று கட்ட தேர்வுகளை சந்திக்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில்நுட்பம் சார்ந்த ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் 2 கோடியே 79 லட்சத்து 60 ஆயிரத்து 224 பேர். அதில் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் 46 லட்சத்து 76 ஆயிரத்து 928 பேர். இதில் டெப்போக்கள், தொழிற்சாலைகள், ரயில் நிலையங்களில் பணியாற்றவே அதிகம் விண்ணப்பிப்பார்கள்.
பெண்கள் லோகோ பைலட்டுகளாக பணியாற்றினால் ஒரே இடத்தில் பணி யாற்றவோ, சராசரி பெண்களைப் போல குடும்பம் குழந்தைகள் கவனிக்க  இயலாது. கடந்த காலங்களில் ஒரு சில பெண்கள் மட்டுமே துணிச்சலாக இந்த வேலையை தேர்வு செய்தார்கள். இதனால் பெண் லோகோ பைலட்டுகள் எண்ணிக்கை சராசரியாக ஒரு ரயில்வேக்கு 20ஐ கூட தாண்டாத நிலை இருந்து வருகிறது. நல்ல மாத வருமானம் மற்றும் நிரந்தர அரசு உத்யோகம்  போன்ற காரணங்களால் இளம் பெண்கள் துணிந்து இந்த வேலையில்  சேர இப்போது ஆர்வம்  காட்ட துவங்கி இருக்கிறார்கள்.நாடு முழுவதும் 27 ஆயிரத்து 795 லோகோ பைலட்டுகள் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. இதில் தமிழகப் பகுதியில் 761, கேரள பகுதியில் 162 என  மொத்தம் 923 பணியிடங்கள் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ளவைகள்.

21 ரயில்வே தேர்வாணையங்கள் மூலம் 17 ஆயிரத்து 673 உதவி லோகோ பைலட்டுகள் பணியிடங்கள் நிரப்ப கடந்த பிப்ரவரி  2018, பொது அறிவிப்பு ரயில்வே வெளியிட்டது. அறிவிப்பு எண்: 1/2018. தெற்கு ரயில்வேயின் சென் னை மற்றும் திருவனந்தபுர தேர்வாணையங்கள் 528 பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பும் அதில் இடம் பெற்றன. கடந்த 2019 ம் ஆண்டு நாடு முழுவதும் இதற்கான தேர்வுகளும் நடந்து முடிந்தன. இதில் தேர்வானவர்கள்தான் இந்த பெண்கள். பயிற்சி முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் பணியில் இணைந்து விடுவார்கள்.அதிகரித்து வரும் பெண் லோகோ பைலட்டுகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு  இந்திய தொழில்நுட்ப கழகம், ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு நிறுனங்கள் துணையுடன் ரயில்வே வாரியம் டாய்லெட் வசதியை என்ஜின்களில் உடனே உருவாக்க வேண்டும். மேலும் ஓய்வு எடுக்கும் அறைகளின் வசதிகளை விரிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு மனோகரன் கூறினார்.

Tags : Drivers ,facilities ,TREU , Female drivers ,train locomotives, created, TREU emphasis
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...