×

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் சமூக விரோதிகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?: சுற்றுப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம்

கும்பகோணம்: தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் உலக புகழ்பெற்ற யுனஸ்கோவால் அங்கீகரீக்கப்பட்டதாகும். ராஜேந்திரன் சோழனால் கட்டப்பட்ட இக்கோயில், அடிக்கு 1008 சிற்பங்கள் உண்டு என்ற சிறப்புடையதாகும்.மேலும், கலை நயத்துடன், கோயில் கட்டுமானங்கள் இருப்பதால், வெளி நாடு, வெளி மாநிலம், உள்ளூர் மற்றும் வெளியூரில,கட்டிட கலைகளையும், ஓவியங்கள், சிற்பங்களை பற்றி படிப்பவர்கள், தினந்தோறும் ஏராளமானோர் காலையில் வந்து மாலை வரை, கோயில் வளாகத்தில் இருந்து, குறிப்பெடுத்து செல்வார்கள்.இதே போல் கோயிலிலுள்ள மூலவர் ஐராவதீஸ்வரரை தரிசனம் செய்வதற்கும் ஏராளமானோர் வருவார்கள். விடுமுறை நாட்கள் மட்டுமில்லாது, விஷேச நாட்களில் அருகிலுள்ளவர்கள், வெளியூரிலிருந்து வருபவர்கள்,கோயில் வளாகத்தில் காலை, மாலை நேரங்களில் இளைப்பாறி சென்று வருகின்றனர்.இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலை தொல்பொருள் துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இதற்காக கோயில் வளாகங்கள் பராமரிக்க ஆட்களும், பகல் இரவு நேர பாதுகாவலர்கள், துறை அலுவலர்கள் என உள்ளனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பாதுகாப்பிற்கு ஆட்கள் இருந்ததால், எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் இருந்து வந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக இக்கோயில் போதுமான பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. இதனால், தற்போது, புல்தரைகளை சீரமைப்பது இல்லை, அங்கு நீண்டநேரம் இருக்கும் காதல்ஜோடிகளை அப்புறப்படுத்துவதில்லை. வாலிபர்கள் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.பகல் நேரங்களில் கால்நடைகள் மற்றும் நாய்களை திரிவதால், பக்தர்கள், படிப்பவர்கள், அச்சத்துடன் கோயிலுக்குள் சென்று வருகிறார்கள்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில், ரவுடிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருகிறது. அவர்கள் இரவு நேரத்தில் வந்து கோயில் வளாகத்தில் கட்டபஞ்சாயத்து, பெண்களை அழைத்து வந்து தகாத செயல்களில் ஈடுபடுவது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் கோயிலை சுற்றிலும் உள்ளவர்கள், பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து, கோயில் நிர்வாகம், போலீசார் என புகாரளித்தாலும், கண்டு கொள்ளாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.மேலும், கோயிலில் அனுமதியில்லாமல், வீடியோ, போட்டோக்களை, மணமக்களை வைத்து படம் பிடிக்க கூடாது என்ற உத்தரவு உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, காதலியை, பல்வேறு கோணங்களில் அருவருக்கத்தக்க வகையில் படம் பிடித்ததால், தொல்பொருள் துறையினர் படம் எடுக்க தடை விதித்தனர்.ஆனால், உத்தரவை காற்றில் பறக்க விட்டு, கோயில் நிர்வாகம் வீடியோ, போட்டோக்கள் எடுக்க அனுமதியளித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு இரவு நேர பாதுகாவரை நியமிக்க வேண்டும், இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாகி வருவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : Darasuram Irawadheeswarar ,Darasuram Iravadeshwara Temple , anti-social ,elements t,Darasuram Iravadeshwara Temple ,Public fears
× RELATED முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு ரூ.1...