×

பாலக்கோடு அருகே புறம்போக்கு நிலத்தில் கட்டிய 66 வீடுகள் இடித்து அகற்றம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

பாலக்கோடு: பாலக்கோடு அருகே புறம்போக்கு நிலத்தில் கட்டிய, 66 வீடுகள் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது. பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி பட்டாபி நகர் பகுதியில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கல்லாங்குத்து எனும், அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. மேலும் கடந்த 3ஆண்டுகளாக ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, காடுசெட்டிபட்டி  ஆகிய பகுதியை சேர்ந்த, 66 நபர்கள் குடிசை அமைத்து வசித்து வந்தனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், இந்த இடத்தை காலி செய்யும்படி பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு, தாசில்தார் ராஜா அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகள் நேற்று காலை, பாலக்கோடு தாசில்தார் ராஜா மற்றும் வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன்  சென்று, அப்பகுதியில் இருந்த 66குடிசை வீடுகளை பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர். இதனால், கடந்த 3 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே வசித்து வந்தவர்களுக்கு பட்டா வழங்கிய நிலையில், எங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தாசில்தார் ராஜா கூறுகையில், ‘கல்லாங்குத்து பகுதியில் புறம்போக்கு நிலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் பட்டா வழங்க சட்டப்படி அனுமதி இல்லை. வீடு இல்லாதவர்கள் முறைப்படி பட்டா வேண்டி மனு செய்தால், உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

Tags : Demolition ,houses ,land ,Palakkad ,Parambhobikku ,Governors ,Parambhobikku Land , Palakkad, Govt
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...