×

காவல்துறைக்கு மாதந்தோறும் செல்லும் மாமூல்: ஜவ்வாது மலை கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகம்...சிறுவர்களும் போதைக்கு அடிமையான பரிதாபம்

வேலூர்: ஜவ்வாது மலை கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை காவல்துறையின் ஆசியுடன் தங்கு தடையின்றி நடப்பதற்கும், சிறுவர்களும் போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தொலைக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மாவட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கி பரவலாக காணப்படும் ஜவ்வாது மலைத்தொடரில் 500க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, ஆலங்காயம், திருப்பத்தூர் ஒன்றியங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், போளூர் ஒன்றியங்களும் ஜவ்வாது மலை கிராமங்களை உள்ளடக்கியுள்ளன. இதில் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் மட்டும் கோவிலூர், நம்மியம்பட்டு, வீரகவுண்டனூர், தென்மலை, அத்திப்பட்டு, பலாமரத்தூர், மேல்சிலம்படி, குட்டக்கரை, கானமலை, கல்லாத்தூர் 11 ஊராட்சிகள் உள்ளன. செங்கம் ஒன்றியத்தில் கிளையூர், ஊர்கவுண்டனூர், மன்றேவ், மேல்பட்டு ஊராட்சிகளும் அடங்கியுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் ஒன்றியத்தில் அத்தியூர் ஊராட்சி குருமலை, அணைக்கட்டு ஒன்றியத்தில் ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு, பீஞ்சமந்தை என மூன்று ஊராட்சிகளும், ஆலங்காயம் ஒன்றியத்தில் காவலூர், பீமகுளம், நெக்னாமலை, புதூர்நாடு, நெல்லிவாசல்நாடு, புங்கம்பட்டுநாடு ஊராட்சிகளும், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ஏலகிரி மலை ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடை மேய்த்தல் என்று கூறப்பட்டாலும், பெரும்பாலான மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பெருநகரங்களில் கூலித்தொழிலையே நம்பியுள்ளது. அதேநேரத்தில் மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது விற்பது என்பது குறிப்பிட்ட சதவீதத்தினரின் வாழ்வாதாரத்தை நிச்சயமாக்குகிறது. அதோடு மலைவாழ் மக்களின் 90 சதவீதம் பேர் கள்ளச்சாராயத்துக்கு அடிமையாகி கிடக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது என்று வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்த 90 சதவீதம் பேரில் 10 முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்களும் அடக்கம் என்பதுதான் வேதனையான ஒன்று என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் மலைகிராமங்களுக்கு சுற்றிப்பார்க்க வரும் வெளியாட்களை கூட சாராய வியாபாரிகள் விட்டு வைப்பதில்லை. மேலும் கள்ளச்சாராய விற்பனையில் 99 சதவீதம் பேர் பெண்களே இறங்கியுள்ளதுதான் வேதனையிலும் வேதனை என்கின்றனர் அவர்கள். குறிப்பாக ஜம்னாமரத்தூர் ஒன்றியத்தில் அமிர்தி தொடங்கி காவலூர் வரையும், போளூர் தொடங்கி ஜம்னாமரத்தூர் வரையும், ஜம்னாமரத்தூர் தொடங்கி செங்கம் வரையும் ஜம்னாமரத்தூரை பிரதான நகரங்களுடன் இணைக்கும் சாலை வழியெங்கும் கள்ளச்சாராய விற்பனை பட்டவர்த்தனமாக 24 மணி நேரமும் நடக்கிறது. அதேபோல் கள்ளச்சாராயமும் மலை கிராமங்களிலேயே காய்ச்சப்படுகிறது. போலீசாரின் கள்ளச்சாராய ரெய்டு என்பது பெயரளவுத்தான் நடக்கிறது. இதனை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்வதில்லை. மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை என்பதுதான் வருத்தத்துக்கு உரிய விஷயம். கள்ளச்சாராயத்தை பொறுத்தவரை காவல்துறைக்கு உரிய மாமூல் மாதந்தோறும் சென்று சேர்ந்து விடுவதே அவர்கள் கண்டுகொள்ளாமைக்கு காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, இரண்டு மாவட்டங்களிலும் மலை கிராம மக்களிடம் கள்ளச்சாராயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதனை காய்ச்சி விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சாராய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்துக்கு மாற்றுவழியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

மரத்தில் பையை தொங்க விட்டு வியாபாரம்

அமிர்தி தொடங்கி ஜம்னாமரத்தூர் வரை அடர்ந்த வனப்பகுதியின் ஊடாக செல்லும் சாலைகளில் கூட ஆங்காங்கே மரங்களில் பெரிய பைகளை கட்டி தொங்க விட்டு அதில் சில்வர் பேப்பர் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் யார் சென்றாலும் நிறுத்தி சாராயம் வேண்டுமா? என்று கேட்டு விற்பனை செய்யும் அளவுக்கு வெளிப்படையாகவே சாராய விற்பனை நடப்பதை காண முடிந்தது. அதேபோல் கள்ளச்சாராயத்தை எந்தவித கூச்சமும் இன்றி பள்ளி மாணவர்கள் கூட வாங்கி குடிப்பதையும் மலைச்சாலைகளில் பார்க்க முடிந்தது.

Tags : mountain villages , Police, Mamul, Javadu Mountain, counterfeit sales
× RELATED தமிழக மலைக் கிராமங்களுக்கு 156...