×

பொருளாளர் பதவியில் இருந்து விலகுகிறார்; திமுக 6வது பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுவார்...மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன்(98) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு  காரணமாக கீழ்ப்பாக்கத்தில் ஆஸ்பிரியன் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஓராண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அன்பழகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கடந்த மாதம் 24ம்  தேதி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 7ம் தேதி அன்பழகன்  காலமானார். மறைந்த அன்பழகன் கடந்த 1977ம் ஆண்டு முதல் திமுக பொது செயலாளராக இருந்து வந்தார். சுமார் 43 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் திமுகவின் புதிய பொது செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான  பொதுக்குழு கூட்டம் வருகிற 29ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுச் செயலாளருக்கு போட்டியிட இருப்பதால் திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து  துரைமுருகன் விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். வருகிற 29-ம் தேதி அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக மூத்ததலைவர்  துரைமுருகள் பொதுச்செயலாளாரக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினமே பொருளாளரும் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக பொதுச்செயலாளர்கள்:

1949ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா, திமுகவை தொடங்கினார். கட்சி தொடங்கியதும் அவர்தான் முதல் முறையாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக பதவி  ஏற்றார். பின்னர் மீண்டும் அண்ணா பொதுச் செயலாளராக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு 1969ம் ஆண்டு தற்காலிக பொதுச் செயலாளராக நெடுஞ்செழியன் தேர்வானார். அவரைத் தொடர்ந்து 1977ல் கட்சிக்குள் தேர்தல் நடைபெற்றது.  அதில் பேராசிரியர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 43 ஆண்டுகள் அன்பழகன் பொதுச் செயலாளராக இருந்தார். தற்போது 6வது பொதுச் செயலாளர் தேர்வு நடைபெறுகிறது.

துரைமுருகன் வரலாறு:

வேலூர் மாவட்டம் காங்குப்பம் ஊரில் பிறந்த துரைமுருகன், வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். திமுக வின்  மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைமானி சட்டம் மற்றும் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைமானி கல்வி பயின்று பட்டம் பெற்றார். துரைமுருகன் முதன் முதலில்  1971இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு மீண்டும் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற  உறுப்பினராக உள்ளார்.


Tags : treasurer ,Duramurugan ,General Secretary ,DMK 6th ,Will contest ,Durumurugan ,DMK , Resigns treasurer; Durumurugan will contest for DMK's 6th General Secretary ...
× RELATED திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு