×

மாநிலங்களவை தேர்தல்...: திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் உறுப்பினர்களாக உள்ள 51 எம்பி.க்கள் வரும் ஏப்ரலில் ஓய்வு பெறுகின்றனர். 4 எம்பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் ஏற்பட்ட காலியிடம் என மொத்தம் 55 இடங்களுக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசம் 3, மகாராஷ்டிராவில் 7 இடங்கள், தமிழகத்தில் 6, மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் தலா 5, ஒடிசா ஆந்திரா, குஜராத்தில் தலா 4, அசாம், ராஜஸ்தானில் தலா 3, மெலுங்கானா, சட்டீஸ்கர், அரியானா, ஜார்க்கண்டில் தலா 2, இமாச்சல் பிரதேசம், மணிப்பூர், மேகாலயாவில் தலா ஒரு இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6ம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களை பெறுவதற்காக, தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கடந்த 9ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அன்றைய தினம் அ.தி.மு.க. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். அ.தி.மு.க. வேட்பாளர்களாக கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை ஆகியோரும், அக்கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் கடந்த 12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும், சுயேட்சைகள் 3 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறையில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில், திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஒரு வேட்பாளரை 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேரையும் யாரும் முன்மொழியவில்லை. எனவே, அவர்களது வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.


Tags : DMK ,AIADMK ,Rajya Sabha ,Election , The Rajya Sabha elections, the DMK, the AIADMK, the candidates
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...