×

தமிழக அரசின் உத்தரவையும் மீறி பள்ளி திறப்பு: பொன்னேரியில் தனியார் பள்ளி நிர்வாகம் அலட்சியம்...பொதுமக்கள் புகார்!

திருவள்ளூர்: தமிழக அரசின் உத்தரவையும் மீறி பொன்னேரியில் விடுமுறை அளிக்காத தனியார் பள்ளி மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. இதற்கிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மழலையர் மற்றும் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். எனவே, ஏராளமான மழலையர் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காமல் தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த திருவாயர்பாடியில் உள்ள தனியார் பள்ளியே எல்கேஜி, யுகேஜி, மற்றும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களை இன்று பள்ளிக்கு வரவழைத்துள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதை அடுத்து சுதாரித்துக்கொண்ட பள்ளி நிர்வாகம், சில மாணவர்களின் பெற்றோர்களை தொடர்புகொண்டு மாணவர்கள் திருப்பி வீட்டுக்கு அனுப்பி வருகிறது. மேலும், பள்ளிக்கு வந்துள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்படுவதாகவும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையும் மீறி மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்த இந்த தனியார் பள்ளி நிர்வாகம் மீது கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரிடர் காலங்களில் அரசு அளிக்கும் விடுறை உத்தரவை மீறி, தனியார் பள்ளிகள் தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamil Nadu ,private school administration ,Ponneri ,government , Coronavirus, Schools, Holidays, Tamil Nadu Government, Ponneri, Private School
× RELATED தமிழகம் முழுவதும் மக்கள் ஏமாந்து...