×

2 நாள் விடுமுறைக்கு பின் சட்டப்பேரவை இன்று கூடுகிறது: தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை சீர்த்திருத்த மசோதா தாக்கல்

சென்னை: தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் 17ம்  தேதி முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. அதன் பிறகு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் 9ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 9ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அன்றைய தினம் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அன்றைய தினம் முழுவதும்  கூட்டம் ஓத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து 11ம் தேதி வனத்துறை, 12ம் தேதி பள்ளி கல்வி துறை, உயர் கல்வி துறை, 13ம் தேதி எரிச்சக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.14ம் தேதி சனிக்கிழமை, 15ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை பேரவைக்கு விடுமுறை. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு  துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து உள்ளாட்சி துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இதற்கிடையே, இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை வழங்கும் சீர்த்திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்டப்படிப்பு  மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சீர்த்திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தங்கள் மாநிலத்தில்  உள்ளவர்கள் முன்னுரிமை அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : session ,Legislative ,holidays , Legislative session meets today after 2-day holidays
× RELATED கொரோனா பரவாமல் தடுக்க ஹோமியோபதி...