×

குஜராத் அரசியலில் குழப்பம்; காங்கிரசின் மாநிலங்களவை இடத்தை காலி செய்ய பார்க்கிறதா பாஜக: 14 எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூரில் தங்க வைப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இருந்து 4 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் பாஜகவிற்கு 103 எம்.ஏக்களும், காங்கிரஸுக்கு  73 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் உள்ளது. சட்டப்பேரவையில் பா.ஜ எம்.எல்.ஏ.க்களின் பலம் அடிப்படையில் இரண்டு இடங்களை மட்டுமே வெல்ல முடியும். பா.ஜ கட்சி சார்பில் அபய் பரத்வாஜ், ரமீலா பாரா மற்றும் நர்காரி அமீன் ஆகியோர்  நிறுத்தப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் மாறி வாக்களித்தால் மட்டுமே 3வது நபரை வெற்றி பெறச் செய்ய முடியும். 3வது எம்.பி.யை வெற்றி பெறச் செய்ய பா.ஜ குதிரைப் பேரத்தில் ஈடுபடலாம் என கருதி, காங்கிரஸ் கட்சி 14  எம்.எல்.ஏக்களை ஜெய்ப்பூர் அனுப்பியிருந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு இரு மாநிலங்களவை பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர்கள் சக்திசிங் கோஹில் மற்றும் பாரத்சிங் சோலங்கி ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதுகுறித்து குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் நேற்று முன்தினம் ராஜினாமா கடிதம்  அளித்துள்ளனர். அவர்களது பெயர்களை சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பேன்’’ என்றார். இதன் மூலம் 182 உறுப்பினர்கள் உள்ள குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 73ல் இருந்து 69 ஆக குறைந்துள்ளது.

இதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை பதவி மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி 2 எம்.பி பிடிப்பதை தடுக்க பாஜக இதுபோன்று ஈடுபட்டு வருவதாக கட்சியின்  மூத்ததலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு:

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைத்து, எதிர்கட்சிகளின்  ஒற்றுமையை முறித்து, ரெய்டு என்ற பெயரில் அச்சுறுத்தி அவர்கள் பாஜ.வில் இணைவதற்கு அல்லது பாஜ.வுடன் கூட்டணி வைத்துக் கொள்வது போன்ற சூழல். பாஜ.வால் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் எங்கே ஆட்சி  அமைத்தாலும் அதனை சீர்குலைப்பது மட்டுமே பாஜ.வின் குறிக்கோளாக உள்ளது. மாநிலங்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மாநில அரசின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் பாஜ.வின் இந்த காய்ச்சலானது அதிகரித்துக் கொண்டே  வருகிறது.


Tags : Gujarat ,BJP ,Jaipur Gujarat ,Jaipur , Confusion in Gujarat politics; BJP: 14 MLAs deposit gold in Jaipur
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...