×

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாமக்கல்லில் முட்டை விலை வீழ்ச்சி: என்இசிசி 2.65ஆக நிர்ணயித்தும் வியாபாரிகள் 2க்கே வாங்குகின்றனர்

நாமக்கல்,: கொரோனா மற்றும் பறவைக்காய்ச்சல் பீதி காரணமாக, நாமக்கல்லில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அதிகளவில் முட்டைக்கோழி, கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. நாமக்கல்லில் தினமும் உற்பத்தியாகும் 3 கோடி முட்டைகளில், கேரளாவுக்கு ஒரு கோடி முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு வாரம் 3 கோடி முட்டைகள் செல்கிறது. வெளிநாடு ஏற்றுமதி கடந்த இரண்டு ஆண்டாக முடங்கி விட்டது.

தற்போது, கொரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் பீதியால், முட்டை, கோழிக்கறி விற்பனை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளில் பலகோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளது. கேரளாவில் 50 சதவீத அளவுக்கு தமிழக முட்டை விற்பனை குறைந்துவிட்டது. இதனால், முட்டை தேக்கத்தை குறைக்க வழி தெரியாமல் பண்ணையாளர்கள் தவிக்கின்றனர். தற்போது, ஒரு முட்டை , ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) 25க்கும் பண்ணைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைக்கும் வியாபாரிகள் வாங்க முன்வருவதில்லை. கடைகளில் முட்டை விற்பனை, இறைச்சி கடைகளில் பிராய்லர் கறிக்கோழி விற்பனை ஞாயிற்றுக்கிழமைகளில் கூட குறைந்துவிட்டது. பொதுமக்களிடம் நிலவும் தேவையற்ற பீதியை போக்க, என்இசிசி மற்றும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என சிறிய பண்ணையாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பண்ணையாளர்கள் உற்பத்தி நிறுவனங்களிடம் கோழிக்குஞ்சு வாங்கும்போது, ஒரு குஞ்சுக்கு ஒரு ரூபாய் வரை கூடுதலாக வாங்குகிறார்கள். இதன்மூலம் சேர்ந்த பணம் என்இசிசி மற்றும் துணை நிறுவனங்களில் கோடிக்கணக்கில் இருக்கிறது. தற்போது, கேரளா முட்டை மார்க்கெட் முடங்கி விட்டது. தமிழகத்திலும் முட்டை விற்பனை குறைந்து வருகிறது.

முட்டை சாப்பிட்டால் எந்த பாதிப்பும் இல்லை என,என்இசிசி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதால் பண்ணைகளில் பல கோடி முட்டைகள் தேங்கியுள்ளது. பண்ணையாளர்களுக்கு தினமும் 8 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைக்கு, என்இசிசி விலை நிர்ணயம் செய்கிறது. கொரோனா பீதியால், முட்டை விலை தொடர்ந்து குறைந்து வரும் நேரத்தில், என்இசிசி கடந்த வாரத்தில் 3 முறை முட்டை விலையை உயர்த்தி, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியது.  இந்நிலையில், நேற்று முன்தினம் 33 காசும், நேற்று 25 காசும் குறைக்கப்பட்டது. என்இசிசி விலை 265 காசாக இருந்தாலும், பண்ணையில் ஒரு முட்டை 2க்குத்தான் வியாபாரிகள் வாங்கிச்செல்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவுக்கு முட்டை விலை வீழ்ச்சி அடைந்ததில்லை.

கடந்த காலங்களில்  பறவைக் காய்ச்சல் பீதியால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனை சரிவடைந்த போது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முட்டை, சிக்கன் மேளா நடத்தி, பொதுமக்களுக்கு இலவசமாக முட்டை வழங்கி, பண்ணையாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆனால்,தற்போது நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்கள் பல கோஷ்டியாக பிரிந்து சங்கம் நடத்துவதால், யார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது என்ற ஈகோ நிலவுகிறது. அமைச்சர் தங்கமணி, மாவட்ட எஸ்பி அருளரசு ஆகியோரை பண்ணையாளர்கள் சந்தித்து, கொரோனா பீதி கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த வாரம் மனு அளித்தனர். அப்போது,பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் கூறினார். ஆனால், அதற்கான எந்த முயற்சியிலும் நிர்வாகிகள் எடுக்கவில்லை என சிறிய பண்ணையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தினமும் பல கோடி இழப்பு, தொழில் பாதிப்பு என சங்க நிர்வாகிகள் அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால, சிறிய அளவில் கோழிப்பண்ணை தொழில் செய்து வரும் நூற்றுக்கணக்கான பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Namakkal , Namakkal, Egg Price, Fall
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை