×

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: உள்ளாட்சித்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம்

சென்னை: 2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. உள்ளாட்சித்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. அதன் பிறகு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் 9ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 9ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அன்றைய தினம் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அன்றைய தினம் முழுவதும் கூட்டம் ஓத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து 11ம் தேதி வனத்துறை, 12ம் தேதி பள்ளி கல்வி துறை, உயர் கல்வி துறை, 13ம் தேதி எரிச்சக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.14ம் தேதி சனிக்கிழமை, 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பேரவைக்கு விடுமுறை. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து உள்ளாட்சி துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

விவாதத்துக்கு பதில் அளித்து துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். தொடர்ந்து நாளை மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, நாளை மறுநாள் நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை மீதான மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. 19ம் தேதி கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, 20ம் தேதி நீதி நிர்வாகம், சிறைச்சாலை, சட்டத்துறை, 21ம் தேதி சமூகநலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.


Tags : assembly ,vacation ,Tamil Nadu ,government ,Holidays , Holidays, Tamil Nadu assembly, gathers
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு