×

கொரோனா வைரஸ் எதிரொலி: பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விட வேண்டும்

சென்னை: கொரோனா வைரஸ்  காரணமாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு  விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் மாநில தலைவர் அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தலைநகரான டெல்லியில்  வேகமாக பரவியிருக்கிறது. மத்திய அரசை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசும் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவை தற்காலிகமாக நிறுத்தியது, அண்டை மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருக்கிறது. கொரோனா காரணமாக கர்நாடகா, டெல்லியில் தலா ஒருவர் மரணமடைந்திருக்கின்றனர்.

இந்தசூழ்நிலையில் கர்நாடகா மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, வேலூர், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. மேலும், கர்நாடகா கேரளா மாநிலங்களில் இருந்து அதிகளவில் வந்து செல்லும் மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களையும் பாதிக்கும்.  பெரும்பாலான மாவட்டங்கள் கேரளா, கர்நாடகா மாவட்டத்தை ஒட்டியுள்ளதால் அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இந்தமாதம் 31ந்தேதி வரை மற்ற மாநிலங்களை போன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கவேண்டும்.  இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.


Tags : holidays ,Corona ,vacation ,school , Corona, school, college, vacation
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...