×

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் திடீர் ரத்து: மாநில தேர்தல் அதிகாரி தகவல்

திருமலை: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் 6 வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக மாநில தேர்தல் அதிகாரி ரமேஷ்குமார் கூறினார். ஆந்திராவில் வரும் 21ம் தேதி மண்டல பரிஷத் மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தலும், 23ம் தேதி நகராட்சி, மாநகராட்சி தேர்தலும் நடைபெற இருந்தது. இதற்கான வேட்பு மனுத் தாக்கலும் நிறைவு பெற்றது. மேலும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை நடைபெற இருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் அதிகாரி ரமேஷ் குமார் நேற்று கூறியதாவது:
தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த உள்ளாட்சி தேர்தலை ஒட்டு மொத்தமாக 6 வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. 6 வாரத்திற்கு பிறகு அப்போதைய சூழ்நிலைக்கேற்ப ஆய்வு மேற்கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.

கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, சினிமா மற்றும் வணிக வளாகங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் பணி நிமித்தமாக சென்றவர்கள் வாக்குப்பதிவுக்கு வரவேண்டிய சூழல் உள்ளது. மேலும், இந்த தேர்தல் வாக்குச்சீட்டுகள் மூலம் நடைபெற உள்ளதால் நீண்ட நேரம் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க கூடிய நிலை உள்ளது. எனவே, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் தேர்தலை நிறுத்தி வைப்பதாகவும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டாலும், தேர்தல் விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். வாக்காளர்களை கவரும் விதமாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. மேலும், ஜில்லா பரிஷத் மற்றும் நகராட்சி வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் அராஜகத்தில் ஈடுபட்டதை அலட்சியமாக இருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெடும் விதமாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது மற்றும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தாக சித்தூர் மற்றும் குண்டூர் மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று திருப்பதி, குண்டூர் எஸ்பிக்களையும் தேர்தல் பணியிலிருந்து விலக்குவதுடன், காளஹஸ்தி, புங்கனூர் டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்தும், திருப்பதி, பலமனேர், காடிபத்ரி, ராயதுர்கம் இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம், மாச்சர்லா காவல் நிலைய இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்யவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து ஜனாசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண் கூறுகையில், ‘‘தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களை ஆளுங்கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டு வேட்பு மனுக்களை கிழித்தெறிந்து மனுத்தாக்கல் செய்ய விடாமல் தடுத்தும், மனுதாக்கல் செய்தவர்களை மிரட்டி வாபஸ் பெற வைத்தும் போட்டியிடாமல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ரத்து செய்ய வேண்டும். அதேபோல் ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்து, அமைதியான முறையில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் உரிய ஆதாரங்களுடன் பாஜவினருடன் இணைந்து மத்திய அரசிடம் முறையிட உள்ளோம்’’ என்றார்.

Tags : Coronavirus Echoes Echoing Local Elections in Andhra Pradesh ,State ,Andhra Pradesh , Coronavirus virus,echo echoes, state elections, Andhra Pradesh
× RELATED அரசு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்