×

பாதிக்கப்பட்டவர்களிடம் மைக்கை நீட்டி பேட்டி எடுக்க வேண்டாம்: கேரள முதல்வர் வேண்டுகோள்

திருவனந்தபுரம்: ‘‘கொரோனா அறிகுறி இருப்பவர்களிடம் மைக்கை நீட்டி பேட்டி எடுப்பதால், வைரஸ் அதில் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் மைக்கை நீட்டி பேட்டி எடுப்பதை தவிர்க்க வேண்டும்’’ என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கேரளாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பயணி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளதன் மூலம், இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் தங்கி இருந்த சுற்றுலாத்துறை ஓட்டல் நேற்று மூடப்பட்டது. மூணாறு முழுவதும் அனைத்து விடுதிகளிலும் வெளிநாட்டினருக்கு அறை கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, கோட்டயத்தில் இருந்து பூப்பாறை செல்லும் பஸ்சில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். கோட்டயம் போலீசார் அந்த பஸ்சை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் இருவரையும் அந்த பஸ்சில் இருந்து இறக்கி ஆம்புலன்சில் பாலா அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயன்   திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் குறித்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள்  மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.    கொரோனா அறிகுறி உள்ளவர்கள், வைரசால்  பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும்    அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களை பேட்டி  எடுப்பதை தவிர்க்க வேண்டும்.    ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் 4  பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ்    பாதிப்பு உள்ளது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியினர்    பயன்படுத்தும் மைக் மூலமும்  கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புண்டு’’ என்றார்.

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் கொரோனா தொற்று நோய் பட்டியலில்   சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி   அவசர காலகட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை   எடுக்கலாம். அதை மீறினாலோ, தடுத்தாலோ அவர்களுக்கு ஒரு மாதம் வரை சிறை   தண்டனை கிடைக்கும் வகையில் குற்றம் சுமத்தப்படும். மேலும், மாநில பேரிடர் நிதியை கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதி உள்ளார். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் வரும் 31ம் தேதி வரை மூணாறில் சுற்றுலா  பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : victims ,residents , Stop mic, interviewing victims, Kerala, CM request
× RELATED கென்யா வன்முறையில் 13 பேர் பலி; நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு !!