×

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனோ பாதிப்பு இல்லை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,300 ஆக அதிகரித்துள்ளது. 135 நாடுகளில், ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 51 பேர் பலியாகிவிட்டனர். அங்கு  2,500 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு வந்து சென்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அதிபர் டிரம்ப் குடும்பத்தினர் கலக்கம் அடைந்தனர். ஒரு வாரத்துக்கு முன் பிரேசில் குழுவினருடன், அதிபர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனால் அதிபர் டிரம்ப்பும் கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ள முடிவு செய்தார். அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா யாரையும் சந்திக்காமல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். இதற்காக வந்த நிருபர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு நிருபருக்கு காய்ச்சல் இருந்ததால், அவர் வெள்ளை மாளிகையில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘எனது உடல் வெப்பநிலையையும் டாக்டர்கள் பரிசோதித்தனர். அது இயல்பாக உள்ளது. கொேரானா வைரஸ் சோதனையும் நான் எடுத்துக் கொண்டேன். மற்றவரை சந்திக்கும்போது கைகொடுப்பது வழக்கமாகிவிட்டது. அதை எளிதில் விட முடியவில்லை. உண்மையிலேயே கைகொடுப்பதை விரும்பாதவன் நான். ஆனால், அரசியலுக்கு வந்தபின், என்னை சந்திக்க வருபவர்கள் கை கொடுக்க விரும்புகின்றனர். அதனால் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இப்போதைக்கு கை கொடுப்பது நல்லதல்ல’’ என்றார். இதற்கிடையே, அதிபர் டிரம்புக்கு எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் சோதனை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் அதிபருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என வெள்ளை மாளிகை டாக்டர் சேன் கான்லே தெரிவித்தார்.

Tags : Trump ,US , US President Trump , no coronary, influence
× RELATED இந்தியா-சீனா இடையிலான எல்லை...