×

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிறிஸ் லின் அதிரடி சதம்

லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில், லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக களமிறங்கிய ஆஸி. வீரர் கிறிஸ் லின் 55 பந்தில் 113 ரன் விளாசி அசத்தினார். கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லாகூர் அணி முதலில் பந்துவீசியது. முல்தான் சுல்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது. கேப்டன் ஷான் மசூத் 42, ரவி போபாரா 33, ரோகைல் நசீர் 24 ரன் எடுத்தனர். அபாரமாக விளையாடிய குஷ்தில் ஷா 70 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்..

லாகூர் பந்துவீச்சில் ஷாகீன் ஷா அப்ரிடி, டேவிட் வைஸ் தலா 2, முகமது ஹபீஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பகார் ஸமான், கிறிஸ் லின் இருவரும் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 9 ஓவரில் 100 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். பகார் ஸமான் 57 ரன் (35 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். முல்தான் பந்துவீச்சை சிதறடித்த கிறிஸ் லின் சதத்தை நிறைவு செய்தார். லாகூர் அணி 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. லின் 113 ரன் (55 பந்து, 12 பவுண்டரி, 8 சிக்சர்), கேப்டன் சோகைல் அக்தர் 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லின் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


Tags : Chris Lynn Action ,Pakistan Super League , Pakistan Super League,Chris ,Lynn Action
× RELATED பிஎஸ்எல் டி20 கிரிக்கெட்; இஸ்லாமாபாத்...